வேலணை மருத்துவ மாதுவின் கொலை: மூவர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!

வேலணை வைத்தியசாலையில் கடமை யிலிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பநல உத்தியோகத்தர் தர்சிகா சரவணையின் மரணம் தொடர்பாக ஆரம்பக் கட்ட விசாரணையினை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேற்கொண்டுள் ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது, வேலணை வைத்தியசாலையில் கடமையிலிருந்தபோது உயிரிழந்த குடும்பநல உத்தியோகத்தரின் மர்மமரணம் தொடர்பாகச் சுகாதாரத் திணைக்களத்தினால் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இவை தவறான குற்றச்சாட்டுக்களாகும்.

சம்பவம் இடம்பெற்ற மறுநாள் காலையில் எனது தலைமையிலான குழுவொன்று வேலணை வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பந்தப்பட்ட வைத்தியரும் உடனடியாக இடமாற்றப்பட்டார்.

அத்துடன் இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு நிர்வாக உத்தியோகத்தர் அடங்கிய விசாரணைக் குழு வொன்றும் அமைக்கப்பட்டு அக் குழு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இக்குழுவில் வைத்தியர்களான சிவபாதம், சிவராணி மற்றும் நிர்வாக உத்தியோகத்தரான ஜெயவசீகரன் ஆகியோர் அடங்குவர். அவர்களின் இறுதி அறிக்கை கிடைத்ததும் சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டு குறிப்பிட்ட வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது இச் சம்பவம் நீதி மன்ற விசாரணையில் இருப்பதால் பிரஸ்தாப வைத்தியருக்கு எதிராக எம்மால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது. அவரின் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக அவர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத் தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை விசாரணைகள் முடியும்வரை பிரஸ்தாப வைத்தியர் வெளியிடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.