உலகின் பார்வையிலிருந்து தப்பிக்கமுடியாமால் இருந்த ஒரு போராட்டம் தமிழீழ விடுலைப் போர்.!

தீர்க்கதரிசனமான ஒரு தலைமை. ஒழுங்கமைப்பட்ட ஒரு நாட்டிற்கான கட்டுக்கோப்பு. அந்த நாட்டின் நிர்வாகப் பரம்பல் அதனூடான திடமான திட்ட நடைமுறைகள். அதற்கான படையணிகளின் பங்கேற்பு. அவற்றின் சீரிய செயற்பாடு. எல்லைகள் எத்தகைய எதிர்ப்பையும் தாண்டிக் காக்கப்பட்ட அந்தத் தேசம்.
வடக்கே 70 மைல் நீளத்திற்கு கட்டிக்காக்கப்பட்ட எல்லைக்கோடு. மணலாற்றில் மற்றுமொரு மாபெரும் களம். விடுவிக்கப்பட்ட கிழக்கில் நிலச் சொந்தக்காரருக்கே சிம்மாசனம். இப்படித்தான் இருந்தது அந்தத் தேசம்.

2001 ஆம் ஆண்டில் உலகால் நம்பமுடியாத சாதனைகளைச் சாத்தியமாக்கிய அந்த மண்ணில் வேர் ஊன்றியது உலகின் பார்வை.
ஆனையிறவை எப்படி வென்றார்கள் என்பதை ஆராய்வதற்காகவே வப்பெடுத்தது அமெரிக்கப் படைகளின் தென்னாசிய பசுபிக் பிராந்திய கட்டளைத் தலைமையகம். தளபதிகள், தலைவர் அவர்தம் கட்டளைத் பணியகம் என்று சத்திர சிகிச்சை செய்து பகுந்தறிந்து தனது பாட விதானமாக்கிய பல வெற்றிகள். இதற்காக இலவச வானூர்தி சீட்டில் வரவழைக்கப்பட்ட இராணுவ ஆய்வளார்களிடம் கேட்கப்பட்ட கேள்வியின் ஒட்டுமொத்தமுமே “இவர்களால் இது எப்படிச் சாத்தியம்?”.
ஆம்! யாராலும் நம்ப முடியாதபடி அப்படித் தான் இருந்தது அந்தத் தேசம். இருந்தும் இவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என கங்கணம் கட்டியது மேற்குலக இராஜதந்திரம்.
இதற்குக் காரணம் இலக்கற்ற உலகு நோக்கிய ஒரு மதவாதத் தாக்குதலான செம்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக்கா மீதான தாக்குதல். அதன் பயன்பெறாக விடுதலைப் போரையும், மதவாதப் போரையும் வேறுபடுத்த முடியாத உலகு தனக்கு தானே பயங்கரவாத முகமூடி போட்டுக்கொண்ட உலகின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாமால் இருந்த ஒரு போராட்டம் தமிழீழ விடுலைப் போர். இதன் காரணமாகவே தனது இஷ்டத்திற்கு வலிந்து பின்னப்பட்ட ஒர் போர் நிறுத்த ஒப்பந்தம். அதனூடே போரின் பயணம். இதன் பெறுபேறாக உலகின் விருப்புக்களுக்கும் ஒரு இனத்தின் விடுதலைக்கும் இடையிலான புரிந்துணர்வற்ற தன்மை, அடையாளம் காணப்பட்ட ஒரு நிலை.
தேவையான ஆயுத ஆளணிகளை வழமை போல பெறமுடியாத அனைத்துலக வலைப்பின்னல், தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சக்கட்டமாக செய்மதிக் கண்காணிப்பு எனச் சகலமுமே சங்கமாயிற்று இந்தப் அப்பழுக்கற்ற விடுதலைப் போரில்.
ஒரு தேசத்தின் பிறப்பு குழந்தைப் பருவத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறது.
இராணுவ வெற்றிகளின் மேநிலையிலிருந்த போது கைகுலுக்கி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரலாற்றுப் பதிவாக்கிய மேற்குலகின் கரங்களை இறுகப்பற்றி இராஜதந்திரப் பேணலை மேற்கொள்ளமுடியாத ஒரு சூழலில் நமது தேசம் இருந்திருக்கிறது. நாணல்களாக நகர வேண்டிய இராஜதந்திரக் களத்திலும் நாங்கள் பனை மரங்களாக இருக்க வேண்டிய தேவை இருந்ததன் அவசியம் எது என்பது முடிந்த முடிவாகிப் போனவர்களுக்கே தெரிந்த இரகசியம். தேவையானதொரு மாற்றம் ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்பதற்கான விடையைத் தேட இது நேரமல்ல.
டோக்கியா பிரகடனம் அதனூடான 4 பில்லியன் உதவிகளென கிடைக்கவிருந்த எல்லாவற்றையும் 2003 ஆம் ஆண்டில் புலிகள் தவிர்த்து விட்டதாக இன்று யசூசி அகாசி குறிப்பிடுகிறார். ஆனால், புலிகள் கலந்து கொள்ளவில்லையென்றால் அந்தப் பிரகடனமே எதற்கு, ஐயகோ புலிகள் தனிமைப்படப் போகிறார்களே என்று அந்த மாநாட்டிற்கு முதல் நாள் தனது பதவியை துறந்தெறிந்து சென்றவர் அந்த மாநாட்டை தலைமையேற்று நடத்தவிருந்த உலக வங்கியின் தென்னாசியப் பிரிவிற்கான தலைவரான மீகோ நிசுமிசு என்பது இன்றுவரை இரகசியம்.
முன்னுக்குப் பின் முரணான மேற்குறித்த இரு நிகழ்வு குறிப்பீட்டிலும் உள்ள ஒரு ஒற்றுமை யாதெனில் இராஜதந்திரமே பலிக்கடாவாகியுள்ளது என்பது தெளிவாகப் புலனாகிறது.
புலம்பெயர்ந்த நாங்கள் கூட போதாக்குறைக்கு போராடும் இனமாகவே இருந்து கொண்டிருக்க வேண்டுமென்பது போல மேற்குலக நடைமுறைக்கு ஒவ்வாத, இத்துப் போன, புரையோடிப்போன வழிவகைகளில் எமது பிரச்சினையை மையப்படுத்த முனைந்து புரிதலிற்கான வழிகளை ஏற்படுத்த முடியாமல் தவித்துப் போனோம். ஆனாலும் இந்தக் கற்பிதங்கள் விடுதலைப்போருக்கான பாடங்களாக எடுத்துக் கொள்ளப்படுவதையும், இதன் மூலம் மீண்டும் மீண்டும் போர் அரங்குகள் திறக்கப்படுவதையும் இனியொரு போர் போராட்டத்தின் வழியாகப் போவதில்லை என்பதையும் ஏற்று அவர்கள் நேர்மையாகப் போராடிப் போயிருக்கிறார்கள் என்பதே கடைசிக்காலம் எமக்குச் சொல்லி நிற்கின்ற செய்தி.
விடுதலைப் போரின் மையப்புள்ளி திடமான சிந்தனைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டே உலக வழக்கின் உச்சப் போருக்கு முகம் கொடுத்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் தலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்ற நாசகார உலகின் அவாவின் ஆக்ரோசத்தை அது புரிந்திருக்கிறது. தன்னைப் பகடைக் காயாக்கி மீண்டும் மீண்டும் இந்த போர் அரங்கு ஒரு முடிவற்ற திசை நோக்கிப் பயணிக்கக்கூடாது என இந்த தலைமை தீர்மானித்திருக்கிறது. அது தான் இந்தப் போரின் முடிவுமாயிற்று.
இந்தத் தலைமை, தனது தளபதிகளுடனும் போராளிகளுடனும் கானகம் சென்று சிங்களப் படைக்குச் சிம்ம சொப்பனமாக இருத்தல் என்பது யாருமே அறிந்த சாத்தியமாக இருந்த போதும், அவ்வாறாக மீண்டும் மீண்டும் ஒரு முடிவற்ற நிலைநோக்கி பயணிக்கக்கூடாது என்பதிலும் மக்களின் விடிவிற்கான பாதை இதுவாக இனி இருக்க முடியாது என்பதிலும் அவர்களுக்கு ஐயம் இருந்திருக்காது என்பதையே நாம் விளக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இது ஒரு புதிய யுகத்தின பிறப்பின் முன்னுதாரணம். வரலாறு என்றுமே சொல்லிச் செல்லாத ஒரு நவீன செய்தி.
நாங்கள் எல்லோருமே எழுப்புகிற வினாக்கள் மூன்று. ஏன் காட்டிற்குப் போகவில்லை? ஏன் கரந்தடிப்படையாக மாறவில்லை? ஏன் தலைமையைக் காக்கவில்லை? என்பனவாகும்.
இந்தக் கேள்விகளை அவர்கள் பரிசீலிக்காமல் விட்டிருப்பார்கள் என நாம் எண்ணுவது தவறாகும். அவர்களுக்கு இத்தகைய கேள்விகளுக்கான சாதகமான பதில்களுக்கு மேலாக ஏதோ ஒரு எதிர்பார்ப்பற்ற ஈகம் இருந்திருக்கிறது. அது இப்போது விவாதத்திற்கு உட்படுத்தப்பட முடியாத முடிவாயிற்று.
வரலாறு விட்டுச் செல்லும் பாடங்களை கற்பிதமாக எடுத்துப் போற்றிப் பாடிவந்த நாங்களும் எமது விடுதலைப் போரும் தியன்-பியன்-பூவையும், சீனத்து போரறிஞர் சன் சூவையும் தலையணையாக்கி துயில் கொண்டிருந்த போதில் இவ்வாறாக இந்த விடுதலைப்போரும் அழித்தொழிக்கப்படும் என்பதை, முன்னைய வரலாற்றின் பாடங்களை ஏனோ சீர்தூக்கிப் பார்க்க முனையவில்லை. ஆனால், இந்த போர் நிறுத்த காலமும் அதற்குள்ளே ஒழிந்திருக்கும் செய்திகளும் அவை சொல்லிச் செல்லும் அர்த்தங்களும் ஏராளம்.
எமது விடுலைப் போரின் கட்டுக்கோப்பை, புதிய தேசத்தின் பிறப்பை இந்தச் அனைத்துலகம் ஏற்றுக்கொள்ளும் நிலையில்லை என்பது தெரிந்து கூட மரபு வழிச் சமரில் கடந்த மூன்றாண்டுகள் களமாடி இறுதி நாளான மே 18 ஆம் நாள் வரை தன்னை நிரூபிக்க முயன்றிருக்கிறது அந்தத் தேசம். தங்களின் முடிவிலே அழுத்தமாக இருந்திருக்கிறார்கள். ஆக மொத்தம் இந்த விடுதலைப் போரின் இறுதி நாட்களில் இணைத் தலைமை நாடுகள் விரும்பியோ விரும்பாமாலோ இந்த அழிவிற்கான சாட்சியங்களாக, இந்த போராட்டத்தின் வடிவ மாற்றத்தின் தொடக்கம் வரை தமது பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றன.

இந்தப் பயமே இனைத்தலைமை நாடுகளில் ஆசிய நாடுகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ராஜபக்சேவின் விருப்பாகவும் இப்போது வெளிப்படுகிறது. எனவே இந்த இணைத் தலைமை நாடுகள் எமக்கான சாட்சியங்களாக மாத்திரமல்ல, பங்காளிகள் என்ற பாத்திரத்தில் இருந்தே இன்றைய நாள் வரை நகர்ந்திருக்கின்றன.
எனவே, இவர்கள் சடுதியாக இந்த ஆடுகளத்திலிருந்து நகர்ந்து விட முடியாது. ஆயுதங்களை கீழே போடுங்கள் என்ற இவர்களின் வார்த்தைகளுக்கு கடைசி நேரச் சந்தர்ப்பம் கொடுக்க முனைந்த போது சிறிலங்கா செய்த துரோகம் மேற்குலகின் நம்பிக்கைக்கு அடிக்கப்பட்ட சாவுமணி. எனவே இந்த நாடுகள் இப்போது எங்களின் துன்பத்தின் தார்மீகப் பங்காளிகள்.
அவர்களின் அனுசரணையுடனான தமிழர்களின் சகஜ வாழ்வொன்றிற்கான அடுத்த கட்ட நகர்விற்கான சாத்தியம் ஒரு சிறிதளவாவது இருப்பதே, எமது போராட்ட வடிவை சாதக நிலைநோக்கி மாற்றும் வாய்ப்புப் பலமாக இருப்பதே எமக்குக் கிடைக்கப் பெற்ற ஒரு முள்ளிவாய்க்காலின் பெறுபேறு.
எமது ஒற்றுமை மற்றும் இராஜதந்திர நகர்வு புதிய வழிமுறைகளை பின்பற்றுவதே எமது இலக்கை அடைய வைக்கும். எனவே மாற்றம் தேவை என்பதையும் பல தசாப்த இன ஒதுக்கலின் முடிவிற்கான புதிய அத்தியாயத்தை காலம் எமது கைகளில் தந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து நாடு கடந்த அரசை தொடக்கப் புள்ளியாக்கி காரியத்தில் இறங்குவோம்.
உலக வாழ்வியலின் பொய்த்துப் போகாத இரண்டு விடயங்களை எப்போதுமே ஆணித்தரமாக நம்புங்கள். “மாற்றம் ஒன்றே மாறாதிருக்கும்”, “எந்த ஒரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.