அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரில் அதிகமானவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரில் அதிகமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அவுஸ்திரேலிய ஊடமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சரணாகதி அடையும் 25 முதல் 50 வீதம் வரையிலான இலங்கைத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளாகவோ அல்லது அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டவர்களாகவோ காணப்படுவதாக இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போன்று அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யாமையினால், அதிகளவு புலி ஆதரவாளர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைவதாக பாதுகாப்பு ஆய்வாளார் செர்கி டி சில்வா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர் ஒருவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தடைகள் எதுவும் விதிக்கப்படாத காரணத்தினால் அதிகளவான புலி உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் சரணடைவதனை விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
எவ்வித புனர்வாழ்வும் அளிக்கப்படாது, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் சரணாகதி அடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
2008ம் ஆண்டில் 1100 பேர் அவுஸ்திரேலியாவில் சரணாகதி அடைந்துள்ளதாகவும் இதில் 325 பேருக்கு வீசா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
85 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்டுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.