திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்!

அமெரிக்கக் கடற்படையின் ‘யு.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர்’ என்ற பாரிய போர்க்கப்பல் நேற்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு சென்றுள்ளது. 186 மீற்றர் நீளமும் 11,251 தொன் எடையும் கொண்டு 24 அதிகாரிகள் மற்றும் 328 மாலுமிகள் பணியாற்றும் இப் போர்க்கப்பல் 500 படையினரைத் தரையிறக்கும் சிறிய மற்றும் நடுத்தர தரையிறங்கு கலங்களைக் கொண்டுள்ளது.

இந் நிலையில், சிறிலங்காக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்று அதன் கட்டளை அதிகாரியான கொமாண்டர் டெவிட் குலுசியளன வரவேற்றதுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.

அமெரிக்க கடற்படைக் கப்பல் நல்லெண்ணப் பயணமாகவே சிறிலங்கா சென்றுள்ளதாகவும், திருகோணமலையில் தரித்து நிற்கும் போது சிறிலங்கா கடற்படையினருடன் உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலான சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.