தமிழ் மக்களிக்கு உதவுவது தவறா? – நடிகை அசின் கேள்வி!

தங்களைப் பார்க்கவோ உதவவோ, தமிழகத்திலிருந்து எவரும் வராதது குறித்து இலங்கைத் தமிழ் மக்கள் தன்னிடம் கேட்டதாக தென்னிந்திய திரைப்பட நடிகை அசின் தெரிவித்துள்ளார். தனது இலங்கை விஜயம் குறித்து நாளிதம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.

தொழில் நிமித்தமாகவே தான் இலங்கை சென்றதாக இச் செவ்வியில் குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு தடை விதிக்க வேண்டுமென சிலர் துடிப்பதைக் கண்டு தான் பயப்படவோ, கவலைப்படவோ போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகவே நான் இலங்கை சென்றேன். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவது குறித்து தயாரிப்பாளரும், இயக்குனருமே முடிவு செய்தனர்.

இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழ் மக்கள் படும் துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியும், விடுதலைப்புலிகள் அதிகம் இருந்த இடமான யாழ்ப்பாணத்துக்குச்  சென்றேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலையில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பார்த்து கண் கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழ் மக்களுக்கு என் சொந்தச் செலவில் அறுவைச் சிகிச்சை செய்தேன்.

இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற ஐந்து கண் வைத்திர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன். இவ்வாறு 10,000 ஆயிரம் பேருக்கு இலவச கண் அறுவைச் சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
இப்படி இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?

என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் இருந்து எவரும் தங்களை பார்க்க வராதது ஏன்? என்று கண்கலங்கி கேட்கிறார்கள்.

விஜய் அண்ணாவையும், சூர்யா அண்ணாவையும் வரச் சொல்லுங்கள் அக்கா என்று கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத் தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை’ என்று இச் செவ்வியில் அசின் கூறியதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந் நிலையில், இலங்கை தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படவுள்ளதாக .நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.