மகிந்தவும், அமைச்சர்களும் கிளிநொச்சி பயணம்; மக்கள் மீது படையினர் கெடுபிடி!

ஜனாதிபதி பிரதமர் மற்றும் இலங்கையின் அனைத்து அமைச்சர்களும் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டமையையிட்டு கிளிநொச்சியின் இயல்பு நிலை இன்று முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியின் பிரதான தெருக்கள் அனைத்திலும் பல நூற்றுக் கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களிலும் பலநூறு படையினர் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் மகிந்தராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார்.

இதே நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண உட்பட்ட அமைச்சர்கள் பலரும் உரையாற்றியிருந்தாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மகிந்தராஜபக்ச, 

இனவாதம், பிரிவினைவாதம், அகங்காரவாதம், இனிவேண்டாம். இந்த சிறுபான்மையினர் என யாரும் இல்லை. நாட்டின் மீது அன்புகொள்ளும் அனைவரும் இலங்கையர்களேயாவர்.

அபிவிருத்திப் பாதையில் இலங்கை முக்கிய கேந்திர நிலையமாக உருவாகும். என்றும் எப்போதும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். ஜனநாயக ரீதியில் செயற்பட மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அரசியல்வாதிகள் மக்கள் தப்பான வழிகளில் கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இன ரீதியான, மத ரீதியான, மொழி ரீதியான மாகாண ரீதியான குறுகிய அரசியல் நோக்கம் இனிவேண்டாம் என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பிற்கென வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்து மக்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கடும் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.