அரசாங்கத்தின் வலையில் ஐக்கிய தேசியக் கட்சி விழுந்து விட்டது – ரில்வின் சில்வா

அரசாங்கம் விரித்த வலையில் ஐக்கிய தேசியக் கட்சி விழுந்து விட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அரசாங்கம்  தன்னிச்சையாக மேற்கொண்டிருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஏற்படக் கூடிய எதிர்ப்பிலிருந்து தப்பிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்துவது போல நடிப்பதாகவும் இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் துணை போவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை முன்வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் அதற்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் இவ்விடயத்திலுள்ள அரசியல் சிக்கல்களையும் அரசாங்கம் உணர்ந்துகொண்டது. அதனால் அரசாங்கம் ஐ.தே.கவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன் மூலம் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என அரசாங்கம் கருதுகிறது.

ஐ.தே.க. தலைமை இவ்விடயத்தில் ஏமாறுவது குறித்து நாம் கவலை அடைகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.