விமல் வீரவன்ச போன்றவர்களின் நடவடிக்கைகளினால் ஈழம் தொடர்பான பிரச்சாரம் வலுப்பெறும்

ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச போன்றவர்களின் நடவடிக்கைகளினால் ஈழப் பிரச்சாரம் வலுப்பெறுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை இந்தக் காலப்பகுதியில் கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கிணற்றுத் தவளைப் போன்ற ராஜதந்திர அணுகுமுறை நாட்டை சர்வதேச ரீதியில் இழிவுபடுத்தக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
விமல் வீரவன்ச போன்றவர்களினாலேயே நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாகவும், உண்மையில் இவர்களே நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்துவோர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஜே.என்.பி தலைவர் விமல் வீரவன்சவை குற்றம் சுமத்த முடியாது ஏனெனில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இயக்கத்தில் நடிக்கும் ஓர் நடிகனாகவே வீரவன்சவை நோக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச சமூகத்துடனான விவகாரங்களின் போது இலங்கை அரசாங்கம் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் சுமூகமான உறவுகளைப் பேண வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இல்லையென்றால் சிம்பாப்வே அல்லது மியன்மாரின் வழிப்பாதைகளை பின்பற்ற நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு நன்மதிப்பு காணப்பட்டதென்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளின் காரணமாகவே சர்வதேச சமூகத்துடன் சுமூகமான உறவுகளைப் பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமைகளை பேண ஆர்வம் காட்டிய ஓர் நபர் எனவும், பல்வேறு போராட்டங்களில் தம்முடன் இணைந்து போராடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதியின் இளைய சகோதரர்கள் தேசியவாத கொள்கைகளை கடைபிடிப்பதாகவும், இதனால் ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போதைய வெளிவிவகார அமைச்சரினால் சுயாதீனமாக கடமையாற்ற முடிவதில்லை எனவும், ஜனாதிபதி செயலகம் வெளிவிவகார அமைச்சின் முக்கிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.