சீமானை வேலூர் தனிமைச்சிறையில் அடைத்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை – நம் தமிழர் இயக்கம்

தண்டனை பெற்ற கைதிகளை மட்டுமே தனிமைச் சிறையிலடைக்க வேண்டுமென்கிற விதிமுறைகளை மீறீ சீமான் அவர்களை வேலூர் தனிமைச்சிறையில் அடைத்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று நம் தமிழர் இயக்கம் அறிக்கை வெளிட்டு  உள்ளது.

பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசினார் என்று தமிழ் நாடு காவல் துறை வழக்கு பதிவு செய்து எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை 12.7.10 அன்று சென்னையில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த 30 ஆண்டு காலமாகவே இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து செந்தமிழன் சீமான் தலைமையில் 10.7.10 அன்று காவல் துறையின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்போம் என்று அரசசாசனப்படி உறுதி மொழி எடுத்து அரசின் பதவிகளுக்கு வருகிறார்கள்.

ஆனால் 1993 ஆம் ஆண்டிலிருந்தே சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுடப்பட்டும், அடித்துக் கொல்லப்பட்டும் வந்துள்ளனர். ஆயிரகக்ணக்கான மீீனவர்கள் படுகாயப்பட்டுஊனப்படுத்தப்பட்டு உள்ளனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நம் மீனவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தபேராபத்துகளிலிருந்துகாப்பாற்றவேண்டியபொறுப்பும் கடமையும் உள்ள மத்திய, மாநில அரசுகள் சிங்கள அரசுக்கு வெறும் கடிதங்கள் அனுப்புவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தமிழக மீனவர்களின் உயிர்களைத் துச்சமாகக் கருதுவதோடு உலகில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத இத்தகைய கொடுமைகளை உரிய நடவடிக்கை எடுத்துத் தடுக்காமல் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

நமக்குப் பகை நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொல்வது கிடையாது. ஆனால் நட்பு நாடு என்று சொல்லப்படுகிற இலங்கை மட்டும் தான் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறது.

தவறு செய்யும் இலங்கையைத் தட்டிக் கேட்காமல் நமது வரிப் பணத்தில் இந்திய அரசு இலங்கை கடற்படைக்கு இரண்டு போர்க் கப்பல்களைத் தந்து உதவுகிறது. இந்தக் கப்பல்களைக் கொண்டே நமது மீனவர்களை அவர்கள் சுட்டுக் கொல்கிறார்கள். நம் நாட்டுக் கடற்படையும் இதனைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. மேலும், தமிழக மீனவர்களின் இப்பிரச்சனையைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலோ, ஐ நா வின் மனித உரிமை ஆணையத்திலோ முறையிட்டு நியாயம் கிடைக்க இதுவரை இந்தியா எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. சிங்களவருக்குக் கச்சத் தீவை இந்தியா தாரை வார்த்துக் கொடுத்ததோடு நில்லாமல், இந்தியா அன்றாடம் தமிழக மீனவர்களின் உயிர்களையும் தாரை வார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென விரும்புகிறதா என்பது தெரியவில்லை.

இதுவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் போது தமிழ் நாடு அரசு வழக்குகள் பதிவு செய்வதோடு நிற்கிறதேதவிர தொடர்ந்து அவ்வழக்குகளை நடத்தி யாருக்கும் தண்டனை பெற்றுத் தந்ததாக வரலாறு இல்லை. இதையெல்லாம் கண்டித்து நாம் தமிழர் கட்சி போராடினால் செந்தமிழன் சீமான் அவர்களைப் பொய் வழக்குகள் போட்டு கைதுசெய்கிறார்கள். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இதற்கு முன்னர் சீமான் அவர்களைக் கைது செய்த போது 1964 ஆம் ஆண்டு சட்ட விரோதத் தடுப்பு நடவடிக்கைச் சட்டம், பிரிவு 13 இன் படி காவல் துறையால் கைது செய்ய்யப்பட்டதைச் சென்னை உயர் நீதி மன்றம் தவறு எனத் தீர்ப்பு வழங்கி இருந்தது. இப்போது அதே பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போட்டு நீதி மன்ற அவமதிப்பு செய்கிறது.

25,000 மக்கள் கொல்லப்படக் காரணமான போபால் நச்சுக் காற்றால் விபத்தை ஏற்படுத்திய அந்த நிறுவன அதிகாரி ஆன்டர்சன் கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை. மாறாக மத்திய மாநில அரசுகளே பாதுகாப்பாக அவரை வெளிநாட்டுக்குவழியனுப்பி வைத்தார்கள்.ஆனால் இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவிலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே சிங்களவர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க அக்கரை இல்லாதவர்கள், தமிழர்களுக்காக உரிமை குரல்கொடுக்கும்சீமான் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கொலை மற்றும் ஆள்கடத்தல் குற்றங்களைக் செய்துஇந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளஇலங்கையின் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எந்தவொரு ஒப்பந்தப்படியும் பொது மன்னிப்போ,அல்லது விடுவிப்போ வழங்கப்படாத நிலையில், இந்தியாவால்அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.ஆனால் சீமான் அவர்கள் மனித நேயத்தோடு தமிழக மீனவருக்ககாவும் ,ஈழத்தமிழர்களுக்காகவும் உரிமை குரல் எழுப்பினால் அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கிதமிழின உணர்வாளர்களின்குரல் வளையை நெறிக்கப் பார்க்கிறார்கள்.

அதே சமயம் இந்திய கடற்படையின் தென்பிராந்திய அதிகாரி இலங்கை கடற்படை செய்துவரும் அட்டூழியங்களைக் கண்டிக்காமல், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதால்தான் சுடப்படுகிறார்கள் என்று தமிழக மீனவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார். சிங்கள மீனவர் இந்தியக் கடல் எல்லைக்குள் பல முறைவந்து மீன்பிடித்தபோதிலும், நமது கடற்படையால் ஒரு முறை கூட சிங்கள மீனவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது இல்லை .இதிலிருந்து இந்திய கடற்படையின் நோக்கமும்,செயல்பாடும் எந்த நாட்டு மீனவரைப் பாதுகாப்பதில் கவனமாக உள்ளது என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

சீனர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கும் இலங்கை அரசு தமிழக மீனவரைமட்டும் சுட்டுக்கொல்கிறது. இதனை இந்தியா தட்டிக்கேட்காமல் மவுனம் சாதிப்பது தமிழருக்கு பெரும் வேதனை அளிக்கிறது .அங்கே இலங்கை மீது போர்க்குற்றவிசாரணையை நடத்தச்செல்லும் ஐ.நா .வின் குழுவை ராஜபட்சே அரசு அனுமதிக்கமறுக்கிறது.இங்கே தமிழ்நாட்டில் மீனவத் தமிழரின் துயரங்களைத் தடுக்க வேண்டி சீமான் பேசினால் தமிழக அரசு தடுத்து சிறையில் தள்ளுகிறது.சீமான் கைதானபோது காவல்துறையால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கும்,சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான் உள்ளிட்ட 13 தொண்டர்கள்ரத்தம் சொட்டச் சொட்ட காவல் துறையால் தாக்கப்பட்டு சிகிச்சைகூட அளிக்காமல் கடலுர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். அடக்குமுறைகளைக் கொண்டு கொழுந்து விட்டு எரியும் தமிழின உணர்வை யாராலும் அணைத்துவிடமுடியாது.

 தமிழக மீனவர்களை இனியும் இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றால் தமிழர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டார்கள் என எச்சரிக்கை செய்த செந்தமிழன் சீமான் மீது பொய் வழக்கு போட்டு தண்டனை பெற்ற கைதிகளை மட்டுமே தனிமைச் சிறையிலடைக்க வேண்டுமென்கிற விதிமுறைகளை மீறீ சீமான் அவர்களை வேலூர் தனிமைச்சிறையில் அடைத்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.இது இந்திய அரசியல் சட்டம் வ்ழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்குச்சாவுமணி அடிக்கும் செயலாகவே மக்கள் கருதுவார்கள் எங்கள் மீது தொடுக்கும் பொய் வழக்குகளைச் சட்டப்படி அணுகுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.