எஸ்.பி பிளஸ் ரத்து தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணம் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளமை தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணம் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இந்த இந்தத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி நள்ளிரவு முதல் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் அடிப்படையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது.
 
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விபரங்கள் தொடர்பில் ஐக்கிய இராச்சியம் சுங்கப் பிரிவினருக்கு விசேட சுற்று நிருபம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
 
இதுவரை காலமும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இனி வரும் காலங்களில் துணிகள் மற்றும் தைத்த ஆடைகளுக்காக 5.5 வீதம் முதல் 9.6 வீதம் வரையிலான வரி அறவீடு செய்யப்படவுள்ளது.
 
சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் 57 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஆடைக்கைத் தொழில் துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சலுகைத் திட்டத்தை வழங்குவதறக்hக மனித உரிமை மேம்பாடு உள்ளிட்ட 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விதித்திருந்தது.
 
எனினும், இந்த நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தது.
 
நாட்டின் இறைமையை பாதிக்கக் கூடிய எந்தவொரு நிபந்தனைகளுக்கும் அடிபணிந்து சலுகைத்திட்டங்களை பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறெனினும், இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக இதுவரையில் எவ்வித அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.