வடக்கில் இருபது வீதமான கண்ணிவெடிகளே அகற்றப்பட்டுள்ளன – சிறிலங்கா அரசாங்கம்

வடக்கில் இருபது வீதமான கண்ணிவெடிகளே அகற்றப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,

“வடக்கில் சுமார் 15 இலட்சம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இருபது வீதமான கண்ணிவெடிகளே அகற்றப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 640 இடங்களில் இதுவரை 266,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத்தினரே 90 வீதமான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதேவேளை நேற்றையதினம் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவெல செய்தியாளர்களிடம பேசும்போது இதுவரை 290,500 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

இயந்திரங்கள மற்றும் மரபுசார் முறைகளின் மூலம் இதுவரையில் 1744 சதுர கி.மீ பரப்பளவு நிலப்பரப்பில் கண்ணிவெடிகள், பொறிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் 1050 படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரையில் 290,500 கண்ணிவெடிகள் இராணுவத்தின் களப்பொறியியல் படைப்பிரிவினால் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு அகற்றும் பணிகளில் 29 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வடக்கு,கிழக்கில் சில இடங்களில் அனைத்துலக மற்றும் உள்ளுர் நிறுவனங்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.