லஞ்சம் பெறும் கெடுபிடியில் போக்குவரத்துப் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

வடக்கு கிழக்கில் இருந்து தென்னிலங்கைக்கு பயணிக்கும் தனியார் பேருந்துகள் உட்பட்ட வாகனங்களில் இருந்து தேவையற்ற காரணங்களைக் கூறி போக்குவரத்துப் பொலிஸார் அதிகளவிலான லஞ்சம் பெறும் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்துகள், டொல்பின் வாகனங்கள், பார ஊர்திகள் உட்பட்ட வாகனங்களை இடைமறிக்கின்ற போக்குவரத்துப் பொலிஸார் ஆவணங்களைக் கேட்பதற்குப் பதிலாக பணத்தினையே கேட்டு மிரட்டிப் பெற்று வருகின்றனர்.

இதன் அடிப்படையில் குறித்த வாகனங்கள் தென்னிலங்கை நோக்கிப் பயணிக்கும் போது அவற்றின் நடத்துனர்கள் தமது வாகனங்களின் ஆவணங்களுடன் ஐநூறு தொடக்கம் ஆயிரம் ரூபாவை வைக்கவேண்டும்.

வாகனம் மறிக்கப்படும் போது உடனடியாக அதனை போக்குவரத்துப் பொலிஸாரிடம் நடத்துனர் ஒப்படைப்பார். அதில் இருந்து பணத்தினை அவர்கள் பிடுங்கிக் கொள்வர் உடனடியாக வாகனம் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

அவ்வாறு பணம் வழங்கப்படாது விடின் காரணம் ஏதும் இன்றி வாகனங்கள் பல மணி நேரமாகத் தடுத்து நிறுத்தப்படும். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வோர் போக்குவரத்துப் பொலிஸாருக்கு வழங்கவென மூவாயிரம் ரூபா வரையில் கொண்டு செல்லவேண்டும்.

ஆனால் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பேருந்துகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுவருவதாக ஏனைய தனியார் சாரதிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மன்னார், வவுனியா உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சாரதிகளும் இவ்வாறான நடவடிக்கைகளினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அண்மைய காலமாக ஆயிரம் ரூபா தொடக்கம் ஐந்தாயிரம் ரூபா வரையில் வழங்கவேண்டும் என்றும், வாகனங்களுக்கு அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் பணம் வழங்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தாம் உட்படுத்தப்படுவதாக குறித்த பகுதிகளைச் சேர்ந்த சாரதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டாலும் எதற்கும் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.