சிறிலங்காவின் ஊடக சுதந்திர மீறல்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன!

சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்ற அச்சுறுத்தல்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் மௌனமாக இருப்பதாக இலண்டனிலிருந்து வெளிவரும் முன்னணி ஊடகமான கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து அப் பத்திரிகையில் Edward Mortimer கடந்த 12ஆம் திகதி எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கும் சி.பி.ஜே எனப்படும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு சவூதி அரேபியாவையும், உஸ்பெஸ்கித்தானை விட சிறிலங்காவின் ஊடக சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டி உள்ள போதிலும், இது குறித்து வெளியுலகுக்கு தெரியவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்ட போதிலும், அந் நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் இன்னமும் முடியவில்லை என அவர் தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தகவல்களின் படி 2006ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்காவில் குறைந்தது 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.  20க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இது ஈரானை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களுடைய எண்ணிக்கையை விட அதிகமாகும்.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சட்டபூர்வமற்ற கைதுகள், கடத்தல்கள், படுகொலைகள் பற்றிய ஏராளமான விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஊடகங்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் எவரும் இதுவரை தண்டனைக்கு உள்ளாக்கப்படவில்லை.
 
இலங்கையில் போர் நடைபெற்ற போது, போர் நடைபெற்ற பகுதிகளிலிருந்து செய்திகள் வெளிவருதை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக தடை செய்திருந்தது.  இப் போர் முடிவடைந்த பின்னரும் நிலைமைகளில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மின்னஞ்சல்கள் இடைமறிக்கப்படுகின்றன. ஊடக நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றார்கள். இன்னும் சில ஊடகவியலாளர்களோ ஒரு வித சுய தணிக்கையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இருந்து பிரகீத் எக்னெலியகொட காணாமல் போயிருக்கிறார்.
 
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மட்டும்தான் இத்தகைய அச்சத்துக்குள் வாழ்கிறார்கள் என்றில்லை. அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், சட்டத்தரணிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் உயிராபத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
 
2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட நான்கு மடங்கு அதிகமாக இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்ட படை நடவடிக்கைக்கு நியூயோர்க் ரைம்ஸ்ஸும், கார்டியன் பத்திரிகையும் இடம் ஒதுக்கி இருந்தன.
காஸாவில் இடம் பெற்ற படை நடவடிக்கையில் 1,400 பேர் கொல்லப்படடிருந்தனர். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற படை நடவடிக்கையில் ஏழாயிரம் தொடக்கம் நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளிவந்திருந்தது.

இலங்கைப் போருடன் ஒப்பிடும் போது காஸாப் பிரச்சினைக்கு சீனப் பத்திரிகை ஒன்று ஆறு மடங்கு இடம் ஒதுக்கியிருந்தது. தென்னாபிரிக்காவின் சுதந்திரமான பத்திரிகை நிறுவனம் ஒன்று பத்து மடங்கு அதிகமாக காஸாப் பிரச்சினைக்கு இடம் ஒதுக்கி இருந்தது.
 
எங்களில் எவராவது சர்வதேச நியமங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து சிந்திப்பதுண்டா? ராஜபக்சவினுடைய திரிக்கப்பட்ட விடயங்கள் பதிலளிக்கபடாமல் விடப்பட முடியுமா? அவ்வாறு நாம் அனுமதிப்பதென்பது ஏனைய அரசுகளும் உள்நாட்டில் இருந்து எழும் எதிர்ப்பை சிறிலங்காவின் வழிமுறையைப் பின்பற்றி சர்வதேச சட்டங்களையோ அல்லது பொதுமக்கள் படுகொலை குறித்தோ அக்கறையின்றி முறியடிக்க வழிசமைத்ததாகி விடும்.
 
இலங்கையின் ஊடகவியலாளர்கள் இன்னும் இத்தகைய பெரும் அச்சுறுத்தல்கள் மத்தியிலிருந்தும் காணாமல் போதல்கள் சித்திரவதை, படுகொலைகள் குறித்த தகவல்களை  தமது சர்வதேச ஊடக நண்பர்களின் உதவியுடன் வெளிக்கொண்டு வருகிறார்கள். 
 
ரஷ்ய ஊடகவியலாளரான அனா பொலிற்கோவ்ஸ்காயாவி; படுகொலை முழு உலகிலுமே கண்டனத்திற்குள்ளானது. லசந்த விக்ரமதுங்க தான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே தனது படுகொலை குறித்து ஆசிரிய தலையங்கத்தில் எழுதி வைத்தவர். எனினும் அது அந்தளவிற்கு உலகின் கவனத்தைப் பெறவில்லை என அவர் தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.