எமது படைவீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – திஸ்ஸ அத்தநாயக்கா

எமது படைவீரர்களை எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. நாம் யுத்தக் குற்றங்கள் குறித்த ஐநா சாசனத்தில் கையெழுத்திடாததே இதற்குக் காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

2002ஆம் ஆண்டு எமது ஆட்சியின் போது படையினரை யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தும் ஐ.நா.வின் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு கோரப்பட்டது. ஆனால், நாம் அன்று அதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தோம். எனவே எமது படையினரை சர்வதேச நீதிமன் றத்தில் நிறுத்த முடியாது எனவும் அத்தநாயக்கா தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்ப்பினை திசை திருப்புவதற்காகவே கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகத்தின் முன்பாக அமைச்சர் விமல் வீரவன்சவின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்டது எனத் தெரிவித்த அத்தநாயக்கா அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமலே வீரவன்ச உண்ணாவிரதத்தைக் கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பறையடிக்கும் தேசிய சுதந்திர முன்னணியினர் அந்தக் கோரிக்கைகள் எவை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அத்தநாயக்கா சவால் விடுத்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.