ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கான அடுத்த தேர்தலில் பான் கீ மூனை விரட்டியடிக்க சிறிலங்கா முனைப்பு!

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் பதவிக்கு வருகின்றமையைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தற்போதைய பதவிக் காலம் அடுத்த வருடத்துடன் நிறைவடைகின்றது. ஆனால் அவர் மீண்டும் செயலாளர் நாயகமாக மீள் நியமனம் பெற ஐ.நா. சட்டத்தில் இடமுண்டு.

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையால் முன் மொழியப்பட்டு பொதுச் சபையால் அவர் மீள் நியமனம் செய்யப்படலாம். பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் 15. அவற்றுள் நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5. இந்த 5 நாடுகளில் ஒன்று கூட மீண்டும் பான் கீ மூன் செயலாளர் நாயகமாக வரக் கூடாது என்று வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்க முடியும்.

பாதுகாப்புச் சபை ஐ.நா. செயலாளராக மீண்டும் பான் கீ மூன் வரக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றவும் முடியும். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைப் பெற்று மூனின் மீள் நியமனத்தைத் தடுக்க அரசு செயலில் இறங்கியுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகங்களாக இருந்த இருவர் கடந்த காலங்களில் பாதுகாப்புச் சபை எடுத்த தீர்மானங்களால் மீண்டும் அப்பதவிகளுக்கு வர முடியாமல் போனமையை அரசு நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கு இலங்கை அரசின் உயர்மட்டத் தூதுக்குழுவினர் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

குறிப்பாக வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளில் ரஷ்யா, சீனா ஆகிய இரண்டும் இலங்கையை இவ் விடயத்தில் கைவிடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தடவை ஐ.நா. செயலாளர் நாயக பதவிக்கு சிறிலங்காவின் சார்பில் ஜெயந்த தனபால போட்டியிடுவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டபோதும் அப்போது – 2005 இல் – பதவிக்கு வந்த மகிந்த, ஜயந்த தனபாலவின் போட்டியை வாபஸ் பெறுவதாக அறிவித்து, வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பான் கீ மூனுக்கான தனது ஆதரவை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.