கல்முனை மாநகரசபையால் தமிழர்கள் புறக்கணிப்பு!

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் கல்முனை மாநகரசபை செயற்படுகின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

இம்மாநகரசபையின் அமர்வு இன்று புதிய மேயர் மசூர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறினார்.

இவர் இங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-

”கல்முனை வடக்கில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள்.இப்பகுதிக்கென தெரு விளக்குகள் பொருத்துவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு 32 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அப்போது மேயராக இருந்தவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச.எம்.ஹரிஸ். ஆனால் இதுவரை கல்முனை வடக்கில் அந்த வேலைகள் செய்யப்படவே இல்லை.

அதே நேரம் அந்த 32 இலட்சம் ரூபாய் நிதி எங்கே? அதற்கு என்ன நடந்தது என்றுகூடத் தெரியாதுள்ளது. இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அதே காலப்பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் சாய்ந்தமருது பகுதிக்கென ஒதுக்கப்பட்ட 60 இலட்சம் ரூபாய் நிதிக்கான வேலைகள் நிறைவடைந்து விட்டன.

இதற்கான விளக்கத்தை புதிய மேயர் தர வேண்டும். கல்முனை மாநகர சபைக்கு கிழக்குமாகாண சபையின் முதலமச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்பு வருகை தந்திருந்தார்.

அப்போது தமிழ் மக்களுக்கு எந்தப் புறக்கணிப்புமின்றி நான் வேலை செய்கின்றார் என்றும் கல்முனை வடக்கு பகுதிக்கு 32 இலட்சம் ரூபாய் செலவில் தெரு விளக்குகள் அமைகப்படவுள்ளன என்றும்அதற்கான வேலைகள் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும் மேயராக இருந்த ஹரிஸ் கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை.. இதனை தமிழ் பகுதிகள் மீதான புறக்கணிப்பாகவே நான் பார்க்கின்றேன். கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட தமிழ் பகுதிகளிலுள்ள வீதிகள் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.