நாய்கள் என்று எம்மை அழைக்கின்றார்கள்! முன்னாள் போராளி பரபரப்புக் கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசின் தடுப்பு முகாம்களில் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்றும் பி.பி.சி செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஐ.நா சபை நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில் பி.பி.சி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

”அரசின் தடுப்பு முகாம்களில் புலிகளின் முன்னாள் போராளிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் சில வேளைகளில் தொலைபேசித் தொடர்புகள் மூலமாகவும், பல வேளைகளில் கடிதங்கள் மூலமாகவும் பி.பி.சி தமிழ்ச் சேவைக்கு அங்கு நடக்கும் கொடூரங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அவர்கள் அங்கு சித்திரவதை செய்யப்படுகின்றார்கள். அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். கைதிகளை விடுவிப்பதற்கு முன் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களால் இலஞ்சம் கோரப்படுகிறது.

நாய்கள் என்றுதான் இராணுவ உத்தியோகத்தர்கள் அவர்களை வழமையாக அழைக்கின்றனர் என்று தெரிவித்து வவுனியாவில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் எமக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

”ஒரு நாள் சவரம் எடுக்காவிட்டால் கூட அடித்துத் துன்புறுத்துகின்றனர்.மின்சாரச் செலவு,சலவைச் செலவு போன்றவற்றை நாம்தான் அங்கு செலுத்த வேண்டும்.

காசு செலவழிக்காவிட்டால் பூஸா முகாமுக்கு மாற்றி விடுவார்கள் என்று பயமுறுத்துகிறார்கள்.” எமக்குக் கிடைத்த இன்னொரு கடிதத்தில் விடுதலை செய்யப்படுவார்களா? இல்லையா? என்றுகூட தெரியாமல் உள்ளது என்று இன்னொரு கடிதத்தில் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குகின்றது என்று அரசு கூறி வருகின்ற போதிலும் யதார்த்த நிலைமை அப்படி அல்ல என்றும் இக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

திருகோணமலை தடுப்பு முகாம் ஒன்றில் இருந்து புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் கடிதம் எழுதி இருக்கிறார். அவர் அக்கடிதத்தில் இராணுவத்தினர் அடித்துத் துன்புறுத்துகின்றார்கள் என்றும் தலை கீழாக நிற்க விடுகிறார்கள் என்றும் தரையில் தடுக்க வைத்து இடுப்புப் பட்டிகளால் அடிக்கின்றார்கள் என்றும் காயங்கள் ஏற்பட்டால் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இம்முகாம்களில் இருந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் கொண்டு வரப்படுவதில்லை என்றும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாகவே உள்ளது என்றும் சில கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.