தர்ஷிகா கொலைச் சந்தேக நபரான வைத்தியர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிப்பு

வேலணை வைத்தியசாலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ உத்தியோகத்தரான சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட வைத்தியர் செனவிரட்ன நேற்று புதன்கிழமை இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனன் வழக்கு விசாரணை நடத்தினார்.

சிறைச்சாலையில் குறித்த வைத்தியரான செனவிரட்னவுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுடன், அவர் அடித்து தாக்கப்பட்டுள்ளதாகவும்  ஊர்காவற்றுறை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனால் வைத்தியர் செனவிரட்னவை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் ஊர்காவற்றுறை பொலிஸார் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையில், நெஞ்சுவலி காரணமாகவே வைத்தியர் செனவிரட்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இந்நிலையில்,வைத்தியர் செனவிரட்னவை பரிசோதிக்கும் வைத்தியரிடம் நீதிபதி விசாரணை நடத்தியபோது, குறித்த வைத்தியருக்கு எந்தவித நோயும் இல்லை என்பதுடன், அவர் அடி காயங்களுக்கு உள்ளான அறிகுறி இல்லை எனவும் கூறினார். எனினும், குறித்த வைத்தியருக்கு ஸ்கேனிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதன் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னரே இது குறித்து உறுதியாகக் கூறமுடியும் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்கேனிங் பரிசோதனை அறிக்கையுடன்   நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் வைத்தியர் செனவிரட்னவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.