இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சிறந்தது தமிழர்களுக்கு அதிகாரம் தர வேண்டும்: இந்தியா திட்டவட்ட அறிவிப்பு

356இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹலறி கிளிண்டன் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கடந்த நான்கு நாட்களாக விவாதித்தப் பிறகு, இந்தக் கருத்தைச் ஊடகவியலாளர்களிடம் அவர் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்க ஆகிய இரு அரசுகளின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கிறது. முதல் கட்டமாக இலங்கையில் போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து அமைதியாக வெளியேற இசைவளிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் வடக்கு பகுதியில் அனைத்தும் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதும் தேவையாகும்.

இந்த இலக்குகளை எட்ட அங்குள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவது முக்கியமாகும். தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அங்குள்ள தமிழர்கள் கருதும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அவ்வாறு செய்யாவிட்டால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழ் மக்கள் கருதுவார்கள். பாதுகாப்பான இடம் தேடி நகர்வார்கள். அதன் பயனாக மீண்டும் போர் ஏற்படும் என்று சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரால், அங்குள்ள மக்களின் மனித நிலை மோசமடைந்திருக்கிறது என்ற கோணத்தில் மட்டுமின்றி, போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீள்கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டியது தேவையாகும். இது குறித்த இந்தியாவின் கருத்தை அமெரிக்காவும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும் சிவசங்கர மேனன் தெரிவித்தார்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறது. போரில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 56 பேர் கொண்ட மருத்துவக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த குழுவினர் புல்மோட்டை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவ சிசிக்சை வழங்குவார்கள் என்றும் சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை இன்று வியாழக்கிழமை முடித்துக்கொண்ட சிவ்சங்கர் மேனன் நாளை காலை இந்தியா திரும்புகிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.