யுத்த அபாயம் காணப்படும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கையின் பெயர் நீக்கம்

யுத்த அபாயம் காணப்படும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கையின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடற்பரப்பில் எந்தவிதமான தாக்குதல் அச்சுறுத்தல்களோ யுத்த அபாயமோ கிடையாதென உலகின் முன்னணி காப்புறுதி நிறுவனமான லொயிட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

யுத்த அபாயம் காணப்படும் நாட்டின் கடல் பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களுக்கு விசேட கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
எதிர்வரும் காலங்களில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களிடமிருந்து குறித்த யுத்த அபாய மேலதிக காப்புறுதிக் கட்டணம் அறவீடு செய்யப்பட மாட்டாது என காப்புறுதி நிறுவனம் அறிவித்துள்ளது.
 
யுத்த அபாயக் காப்புறுதி கட்டணம் நீக்கப்பட்டதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எவ்வாறெனினும், வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரையிலான ஏ‐9 வீதியில் தரைவழித் தாக்குதல் அபாயம் காணப்படுவதாக குறித்த காப்புறுதி நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
 
எனவே குறித்த பாதையில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கு 2.6 வீதம் மேலதிக கட்டணம் அறவீடு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.