பிரித்தானிய வீரர்களின் மீது உள்ள கோபத்தால் அவர்களை கொன்றதாக கூறியுள்ளான் ஆப்கன் படை வீரன்

கடந்த வாரம் ஹெல்மன்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய ராணுவ வீரர்கள் இருவரையும் தூங்கிக் கொண்டிருந்த வீரர் ஒருவரையும் சுட்டு விட்டு தப்பியோடினான் ஆப்கன் ராணுவ வீரன் ஒருவன். அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

கோழைத்தனமான தாக்குதல் நடத்திய ஆப்கன் ராணுவ வீரனும் அவனுக்கு உடந்தையாக இருந்தவர்களும் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படப் போவது உறுதி என லியம் பாக்ஸ் கூறியிருந்தார். இன்னமும் அவன் ராணுவத்தால் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு பிரித்தானிய படைகள் ஆப்கனில் இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர்கள் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர் என்பதாலேயே அவர்கள் மீது கோவம் கொண்டு சுட்டு வீழ்த்தியதாக ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளான்.

தன்னுடைய பெயர் தலிப ஹுசெயன் என கூறிய அந்த ராணுவ வீரன் இந்த துப்பாக்கிச் சூடு நடந்த போது தனக்கும் தலிபான்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தனியாகவே திட்டமிட்டு அனைத்தையும் செய்ததாகவும் கூறினான்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு பின் தற்போது தலிபான்கள் தனக்கு ஆதரவளித்து நன்றாக கவனத்துக் கொள்வதால் அவர்களுடன் இணைந்து விட்டதாகவும் பி.பி.சி செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் கூறியுள்ளான்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.