அரசின் ஏமாற்று வேலைகளால் சர்வதேச தலையீடுகள் இன்னமும் அதிகரிக்கும் என்கிறது ஜே.வி.பி!

வாய்ப்பேச்சைத் தவிர அரசாங்கத்திடம் வேறொன்றும் கிடையாது. இலங்கை வாழ் தமிழ் மக்களின் சாதாரண பொதுப் பிரச்சினைகளுக்கோ அரசியல் பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை முன்வைக்காது, கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியதில் எவ்விதமான பயனும் இல்லை.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளினால் நாட்டின் அமைதிச் சூழல் சீர்குலைந்து மேலும் சர்வதேச தலையீடுகளே அதிகரிக்கும் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தேவையே தவிர பொதுமக்களின் தேவை அதுவல்ல.

நாட்டு மக்களின் உண்மையான தேவைகளைக் கூட இனங்காண முடியாத அரசாங்கத்திட தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எவ்வாறு எதிர்பார்ப்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து நேற்று வியாழக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவர் தொர்ந்தும் கூறுகையில்,

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தையும் தாண்டியுள்ளது. ஆனால் இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று எராளமான தமிழ் இளைஞர், யுவதிகள் புனர்வாழ்வு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடம்பெயர் முகாம்களில் இருந்து வடக்கு பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்காது அவர்களை அரசாங்கம் அநாதரவாக்கியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பொது மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது அவர்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் அரசாங்கம் தமது இருப்பையும் பதவிக்காலத்தையும் நீடித்துக் கொள்ள அரசியலமைப்பு மாற்றுவது குறித்து ஆராயந்து வருகின்றது.

வடக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கிளிநொச்சியில் தான் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றில்லை. இவ்வாறான முட்டாள் தனமான செயல்களினால் தான் தமிழ் மக்களின் உள்ளங்களில் பிரிவினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்தன என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.