வடக்கு கிழக்கில 640 கிராமங்கள் பாதுகாப்பற்றவை என அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத நிலையில்  குண்டுகள் காணப்படுவதால், அந்த பிரதேசத்தில் உள்ள 640 கிராமங்கள் பாதுகாப்புற்றவை என அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் 15 லட்சம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இவற்றில் தற்போது, இரண்டு லட்சத்து 66 ஆயிரத்து 123 கண்ணிவெடிகளே அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்பார்வை செய்ய தேசிய மத்திய நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உத்ததேச தேசிய மத்திய நிலையம் பணிப்பாளர் ஒருவரின் கீழ் இயங்கவுள்ளது. கண்ணிவெடிகளை அகற்றுதல், கண்ணிவெடிகளினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தெளிவுப்படுத்தல், விபத்துக்குள்ளாவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் போன்ற பணிகள் இந்த நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.

தற்போது ஆயிரத்து 447 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் இலங்கை கண்ணிவெடி அச்சுறுத்தல் இல்லாத நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். தற்போது கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அரசாங்கம் 860 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட்டுள்ளது எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.