தமிழ் மக்களுக்குத் தேவையானதை கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளவேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு!

மக்களுக்குத் தேவையானதை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும். எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேச்சு நடத்தும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்த பல விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தவே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினோம்.

எம்மைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தரப்புடனான பேச்சுக்கள் வெற்றியளித்தன என்று கூறலாம். நாங்கள் மிகவும் நேர்மையுடனேயே கலந்துகொண்டோம். அரசாங்கமும் நேர்மையுடன் செயற்படும் என்று நம்புகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையைக் கொண்டு வருவது தொடர்பில் ஆளும் எதிர்கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்தன. இது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

மேலும் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது. அந்த வகையில் விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ அழைப்பு விடுப்பார்.

இதேவேளை அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

அதாவது இரண்டு தரப்பினரும் பேச்சு நடத்தி தீர்வுத்திட்டம் தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவார்கள் என்று நம்புகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்குத் தேவையானதை அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.