ஐ.நா செயலாளரின் விசேட செய்தியுடன் இலங்கை வருகிறார் பூனே!

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட செய்தி ஒன்றுடன் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னே இந்த வாரம் இலங்கை வருகின்றார்.

இலங்கை விவகாரம் குறித்து உரையாடுகின்றமைக்காக பான் கீ மூன் இவரை நியூயோர்க்குக்கு கடந்த வாரம் அழைத்து இருந்தார்.

இருவரும் இலங்கை தொடர்பாக மந்திராலோசனை நடத்தி உள்ளார்கள். இந்நிலையில் அவர் நியூயோர்க் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை வருகிறார்.

இவர் மூலமாக மூன் இலங்கை அரசுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்புகின்றார் என்று ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ஃபர்ஹான் ஹக் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய நல்லிணக்கம், அகதிகள் மீள்குடியேற்றம், யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல் ஆகியன சம்பந்தமாக இவ்விசேட செய்தி அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகம்-இலங்கை ஜனாதிபதி ஆகியோர் கடந்த வருடம் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில் இணக்கத்துக்கு வந்திருந்த விடயங்கள் குறித்தும் இச்செய்தியில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.