இறுதிக்கட்ட போரின் போது

சிறிலங்கா இராணுவம் எந்தவிதமான போர்க்குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்…

கோத்தாபய ராஜபக்ச தான் எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை இராணுவத்தினர் கடைப்பிடிக்கவேண்டும் என்று பணித்திருந்தார். போரின் பொது அவர் வழங்கிய உத்தரவுகள் கொடூரமானதாகவும், ஒழுக்க குறைபாடுடையதாகவும், அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவும் இருந்தன. இவ்வுத்தரவுகள் அவரது மனப்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருந்தது.

எனினும் இராணுவ அணிகள் எனது கட்டுப்பாட்டில் இருந்ததால் அவற்றை கவனமாகப் பார்த்துக்கொண்டேன். இராணுவத்தினர் என் கட்டளைகளை மீறவில்லை ஏற்று நடந்தனர். கோத்தாபயவின் போர்த்தர்மத்தை மீறிய உத்தரவுகள் இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் என்னால் உறுதியாக கூறமுடியும் தற்போதைய நிலைமையில் இராணுவத் தளபதியிடம் எந்தவிதமான நிர்வாக அதிகாரங்களும் இல்லை.

இராணுவம் சம்பந்தமான அனைத்து அதிகாரங்களும் கோத்தாபய ராஜபக்சவின் கையில் உள்ளது. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம்பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். அப்படியான சம்பவங்கள் எதுவும் இறுதிக்கட்ட போரின்போது நடைபெறவில்லை என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா அதிபரின் அதிகார வரையறைகளில் யாப்பு ரீதியாக செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள பொன்சேகா, நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறை மாற்றம் செய்யப்பட வேண்டியது ஒன்றாகும். இந்த அதிகாரம் சர்வதிகார ஆட்சியை உருவாக்கவல்லது. நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறையில் பல தவறுகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ள பொன்சேகா, இன்று நாட்டிலுள்ள அமைச்சர்கள் பயக்கலக்கத்தின் மத்தியிலேயே அரசியல் நடத்துகின்றனர்.

சிறிலங்கா அதிபர் ராஜபக்சவை பார்த்து பயப்படுகின்றனர் எதிர்ப்பை வெளிப்படையாக காண்பிக்கப் பயப்படுகின்றனர். சிறிலங்கா அதிபருக்கு எதிராக இரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றால் அனைத்து அமைச்சர்களும் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பர். இதன்பிறகு மகிந்த பதவியைத் துறந்து வீடுசெல்ல நேரிடும் என்றும் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.