ஐ.நா.நிபுணர்குழுவுக்கு எதிரான சிறிலங்காவின் நடவடிக்கைகள் படுதோல்வி! இன்னொரு குழுவையும் பான் கீ மூன் அமைப்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவுக்கு எதிரான அணிசேரா நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் யாவும் படுதோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. ஐ.நாவுக்கு எதிரான அணிசேரா நாடுகளின் கடிதம் ஒன்றை வரைவதில் இரண்டு தடவைகள் முயற்சி மேற்கொண்ட சிறிலங்கா அதற்கு பல நாடுகளினதும் ஆதரவு கிடைக்காததை அடுத்து தற்போது மூன்றாவது தடவையாக கடிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கு அணிசேரா நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுவருகிறது.

மேற்கண்டவாறு ஐ.நா. இராஜதந்திரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது கருத்தின் படி, ஐ.நாவுக்கு எதிராக நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு படுதோல்வியை சந்தித்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் வகையில் எட்டு பேர் அடங்கிய செயலதிகாரிகள் அடங்கிய குழுவையும் பான் கீ மூன் அமைத்துள்ளார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் ஆரம்பிக்கவுள்ள ஐ.நா. நிபுணர்குழுவுக்கு உதவி வழங்கும்வகையில் இந்த தற்காலிய செயலகம் செயற்படவுள்ளதாகவும் ஐ.நா. தரப்பு தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

ஐ.நா.வுக்கு எதிரான சிறிலங்காவின் கடும்போக்கு ஐ.நாவுக்கு மட்டுமல்லாமல் ஐ.நா. அவையில் அங்கம்வகிக்கும் ஏனைய நாடுகளுக்கும் சிறிலங்கா மீது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.