உயர் பாதுகாப்பு வலயங்களை துரிதமாய் அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி சுமந்திரன் மகிந்தவிற்கு மடல்!

வடக்கில் வலிகாமம் மற்றும் ஏனைய இடங்களிலும் கிழக்கிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட மாட்டதென்று கூறியிருந்த கருத்துத் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு கோரியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த விவகாரத்தை உங்கள் செயலகத்தில் ஜுன் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது நாம் (த.தே.கூ) எழுப்பியிருந்தோம்.

இந்த விவகாரம் தொடர்பில் தசாப்த காலங்களுக்கு மேல் பல ஏக்கர்கள் கொண்ட நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வயலமாகப் பாவனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் இராணுவ நோக்கத்திற்குத் தேவைப்படும் உண்மையான நிலப்பரப்பை அடையாளம் காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் எஞ்சிய காணிகளை அப்பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியேற விடுவிக்குமாறும் பணிப்புரை விடுத்திருந்தீர்கள்.

திருமுறிகண்டி, சாந்தபுரம், கேப்பாப்புலவு மற்றும் சன்னர் போன்ற இடங்களில் உள்ள தமது காணிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறும் வாய்ப்பு இல்லாமைக்கு உயர் பாதுகாப்பு வலயங்களே காணமாகவுள்ளன.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மீள் குடியேற்ற தாமதத்திற்கு கூரைத் தகடுகள் வந்து சேராமையே காரணம் எனவும் இரண்டொரு மாதங்களில் கப்பல் வந்து சேர்ந்ததும் வெகுவிரைவில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இந்துபுரம், திருமுறிகண்டி போன்ற பகுதிகளில் மொத்தமாக 4,811 ஏக்கர் காணிகளை இராணுவ முகாம் அமைப்புக்கு சுவீகரிக்க நடவடிக்கை முற்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் பின்னணியில் ஊடக அமைச்சரின் அறிக்கை எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தமது சொந்த வாழ்விடங்களில் இருந்தும் மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே ஒன்றரை வருட காலத்திற்கு மேலாக வாழ்விடங்களை விட்டு வெளியேறி அகதி வாழ்க்கை வாழும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வழி காண வேண்டும்.

வடக்கில் வலிகாமம் மற்றும் ஏனைய இடங்களிலும் கிழக்கிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கோருகின்றேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.