பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரில் 80 வீதமானோர் உறவுகளைத் தேடி அலைகின்றனர் – சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு அமைச்சு!

இறுதிப் போரில் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 80 வீதமானவர்களுக்கு மேல் காணாமல் போன தமது உறவுகளைத் தேடித் தருமாறு தம்மிடம்  கோரியதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

குறித்த அமைச்சினால் நடத்தப்பட்ட நடமாடும் சேவையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த பத்தாம் திகதி தெல்லிப்பளையிலும், 11ஆம் திகதி கிளிநொச்சியிலும் 12ஆம் திகதி வவுனியாவிலும் மேற்படி நடமாடும் சேவைகள் இடம்பெற்றன.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் இவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர். தத்தமது குழந்தைகளைச் சுமந்தவாறு நடமாடும் சேவைகளுக்கு இவர்கள் சமூகமளித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

நிவாரணம், நட்டஈடு வழங்குவது என்பவற்றை நோக்காகக் கொண்டு குறித்த சேவைகள் நடத்தப்பட்டாலும் அங்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் தமது கணவர் மாரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும், காணாமல் போன தமது உறவுகளைத் தேடித் தருமாறும், தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவர் மாரை, உறவுகளை விடுதலை செய்து தத்தமது குடும்பத்தாருடன் இணைவதற்கு வழி செய்து தருமாறுமு கோரிக்கைகளை முன் வைத்ததுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களிலும் கோரிக்கையாகவும் அவைகளையே குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் வெலிக்கந்தை நிலையம், திரிகோணமடு விமானப்படை பண்ணை ஆகிய தூர இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களைப் பெற்றோர்களும் உறவினர்களும் சென்று பார்ப்பது கடினமான காரியமாக இருப்பதுடன் அது பெரும் பொருட் செலவையும் ஏற்படுத்துபவையாகவும் இருப்பதால் அவர்களை வவுனியா கிளிநொச்சி பகுதிகளுக்கு மாற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா முகாம்களில் தங்கியுள்ள பெரும்பாலான மக்கள் வாராந்தம் தமக்கு வழங்கப்பட்ட நிவாரண அரிசியினை விற்றுக் கிடைத்த பணத்தில் பேருந்து ஏறி நடமாடும் சேவைக்குச் சென்றிருந்தனர்.

இதன் போது இறுதிப் போரில் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த சிறுவர்களையும் சிறுமிகளையும் பெற்றோர் கைகளில் ஏந்தியிருந்தனர் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.