மாறிவரும் சர்வதேசக் கொள்கைகள்…. முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்களை நோக்கி நகர்வு !!!!!

தமிழர்களாகிய​ நாம் சரித்திரத் தவறுகளையே, மீண்டும் மீண்டும் புதிய​ வடிவில் செய்து கொண்டிருக்கின்றோம், நமக்கென்று ஒரு நாடு ஈழத்தில் இருக்கும் போது, அதன் விடுதலைக்கான​ போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கும் போது, நாடு கடந்து புலம் பெயர்ந்த​ நாம், இன்று அதையும் இழந்து நிற்கிறோம்.
நம் தாய் மண் இன்று மாற்றார் கையில். கடந்த​ வருடம் மே மாதம் வரை, துரோகத்தனங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஈழ​ மண் அந்நியர்களினால் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும் கூட​, என்றாவது ஒரு நாள் எமது மண் பூரணமாக​ மீட்கப்பட்டு விடும், விடுதலை பெறும் என்கிற​ நம்பிக்கை எம்மில் 80%மானோர்க்கு இருந்தது.

ஆனால் அன்று தொட்டு இன்றைய​ நாளின் இந்த​ நிமிடம் வரை எமக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மின​ விடுதலை எதிர்ப்பாளர்களினால், எமது மண்ணிற்கு, எமது மக்களின் விடுதலை வரலாற்றிற்கு, இழைக்கப்பட்ட​ துரோகங்களினால் இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறோம்.

இழந்தவை பொருள், உடைமைகள், உயிர்கள் மட்டுமல்ல​: ஈழப் பெண்களில் நாளுக்கு 10 பேர் வீதம், அந்நிய​ இராணுவத்தால் மறைந்து கொள்ளவே இடமில்லாத​ ஈழமண்ணில் வைத்து மானபங்கப் படுத்தப்படுகின்றாள். நான்கு அதிகாரிகள் முன் விட்டு அளவு பார்த்து,அழகு பார்த்து கேவலப் படுத்தி கதறக் கதறக் அவர்களை உயிரோடு சிதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வாழவே வழியற்றுப் போய் இருக்கும் அந்தப் பெண்களை வரிசையில் நிற்க​ வைத்து பலிக்கு தேர்வு நடக்கும் போதே அவர்களின் மனமும், உயிரும் என்ன துடி துடித்திருக்கும் என்பதை அங்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் காவலர்களும், புலம் பெயர் நாடுகளில், கணணிகளில் பக்கத்திற்கு ஒரு தளம் அமைத்து, பந்தி பந்தியாய் எதை எதையோ எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் இந்த​ அறிவாளர்களும் அறிவார்களா?

விடியும் நாளின் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு இளம் தமிழ் உயிர் கொல்லப்படுவதும் , ஒரு பெண் தன் வாழ்வை இழப்பதும், முதியோரும் சிறுவரும் தவிர்த்து, மிஞ்சியோர் எல்லாம் எதிரியின் இனவாத​ இரைக்குள் அடக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றார்களே …? இன்னுமா தீரவில்லை ..? இந்தக் குரோதங்கள், வஞ்சங்கள், எழுத்து யுத்தங்கள் …? ஏன் …ஏன்…? இன்னும் என்ன​ இருக்கிறது இழப்பதற்கு…? இவை எல்லாவற்றையும் விடுத்து ஏன் எம்மால் முன்னால் வர​ முடியவில்லை..?

பாதிக்கப் பட்ட​ எங்களை விட்டு, சர்வதேச​ சமூகம் தன் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, போர்க் குற்றங்கள் பற்றிய​ விசாரணைகளுக்கு அறிகுறியாக​ ஜக்கிய​ நாடுகள் சபை நாயகம் பான் கீ மூன் அவர்களினால் இந்தோனேசியாவின் முன்னால் தலைமை நீதிபதி “மர்ஸுகி தருஸ்மன்” அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட​ மூவர் கொண்ட​ நிபுணர் குழு தனக்கான​ பணிகளை ஆரம்பிக்க​ முன்னரே, இலங்கை அரசு சகல​ மட்டத்திலும் தன் எதிர்ப்புக்களை காட்டத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு இராஜ​ தந்திர​ மட்டத்தில் அணிசேரா நாடுகளை தன் பக்கம் இழுத்துக் கொள்வதிலும் சரி, உள்நாட்டு இராஜ​ தந்திரத்தில் முக்கிய​ எதிர்க் கட்சியான​ ஜக்கிய​ தேசியக் கட்சியுடன் சுமூக​ பேச்சு வார்த்தை முதல், மக்கள் விடுதலை முன்னனியினரை தன் கைக்குள் போட்டுக் கொண்டு நினைத்தவற்றை செய்து வருகின்றது. நிபுணர் குழு அமைக்கப் பட்டதை அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற​ நாடுகள் வரவேற்று அறிக்கை விட்டிருந்தன. அத்துடன் இலங்கை இந்த​ நிபுணர் குழுவுக்கு ஆதரவை வழங்க​ வேண்டுமென்றும் கேட்டிருந்தன​.

சர்வ​தேசம் முள்ளி வாய்க்காலில் நடந்த​ போர்க் குற்றங்களைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்கான​ நடவடிக்கைகளில் மெல்ல​ நகர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், ஏன் எங்களால் அதை சட்டென்று தொடர​ முடியவில்லை? பாதிக்கப் பட்ட​ நாம், பாதிக்கப் பட்ட​ அந்த​ மக்களுக்காக​ சர்வ​தேசத்தினால் எடுக்கப்படும் இத்தகைய​ நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான​ செயற்பாடுகள் மேற்கொள்வதனை விடுத்து, எதையோ பேசிக் கொண்டும் செய்து கொண்டும் இருக்கின்றோம்.

ஆனாலும் புலம் பெயர் தமிழர்கள் என்கிற​ வகையில் நாடு கடந்த​ அரசாங்கத்தின் சார்பில் திரு ருத்ரகுமாரன் அவர்கள், இந்த​ நிபுணர்கள் குழு சம்பந்தமாக​ வெளியிட்டிருந்த​ அறிக்கையில், ஜக்கிய​ நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களினால் போர்க்குற்றங்கள் சம்பந்தமாக​ ஆராய்ந்து, ஆலோசனை வழங்குவதற்காக​ அமைக்கப் பட்டிருக்கும் நிபுணர்கள் குழுவை வரவேற்பதாகவும், அதன் எதிர் கால​ நடவடிக்கைகள் நீதியானதாகவும், பக்கச் சார்புகள் அற்ற முறையில் இடம்பெற​ வேண்டும் என்றும் கேட்டிருந்தார். கூடவே விசாரணைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அனைத்து உதவிகளையும் நாடு கடந்த​ அரசின் சார்பில் வழங்கத் தயாராக​ இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2009 மே மாதத்தில் முள்ளி வாய்க்காலில் நடந்தேறிய​ போர்க்குற்றங்கள், மனித​ உரிமை மீறல்கள் யாவும் சர்வ​ தேசத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும், உடனடியாக இந் நாடுகளால் நேரடித் தலையீடு செய்ய​ முடியவில்லை. அதற்கு முக்கியமாக​ இரண்டு காரணங்கள் இருந்தன​.

1. இலங்கை ,இந்திய​ அரசின் தூண்டுதல்களினால், எமது நியாயமான​ விடுதலைப் போராட்டத்தை, மேற்கு நாடுகளில் பல​, பயங்கரவாத நடவடிக்கைகள் என​ தடை செய்திருந்தமை.

2.ஈழத் தமிழர் மீதான​ இந்தியாவின் மிக​ இறுக்கமான கொள்கைகளும், நடவடிக்கைகளும்..! (அப்போதைய​ அரசியல் சூழ்நிலைத் தாக்கங்களினால் இடம்பெற்ற​ ஒரு இழப்பிற்காக​, இன்று வரை ஈழத் தமிழ் மக்களை இலட்சக்கணக்கில் பழி வாங்கிக் கொண்டு இருக்கும் மத்திய​ அரசும், குடும்ப​, சுய​ அரசியல் நலன்களிற்காக அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் மாநில​ ஆட்சியிலிருக்கும் அரசியல் வாதிகளும், ராஜீவ் காந்தி அவர்கள் சிங்கள​ அரசுடன் சேர்ந்து போட்டுக் கொண்ட​ ஒப்பந்தங்களாலும், மேற்கொண்ட​ இராணுவ​ நடவடிக்கைகளாலும், ஈழத் தமிழ் மக்கள் அந் நாளில் இன்னுமோர் பேரழிவிற்குட்பட்டனர் என்பதை புரிந்து கொள்ளத் தவறியமை, அல்லது புரிந்து கொள்ள​ மறுக்கின்றமை வருத்தத்திற்குரியதே. மத்தியில் இருக்கும் மாற்று மொழிஆட்சியாளருக்கு புரியாது விட்டாலும் பரவாயில்லை, ஆனால் ஏறக்குறைய​ ஏழு கோடித் தமிழ் மக்களின் தலைவர்களாக​ மாற்றி மாற்றி ஆட்சிக்கு வரும் தமிழக​ அரசியல் தலைவர்கள் கூட​ அப்படியே இருப்பது தமிழர்களின் தலைவிதி…!

இத்தனைக்கும் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற​ இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொலை செய்திருந்தார். அதற்காக​ இந்திய​ அரசு சீக்கியர்களை தேடித் தேடி கொல்ல​ வில்லை. கொழும்பில் திரு . ராஜீவ் காந்தி அவர்களுக்கு இலங்கை அரசால் வழங்கப்பட்ட​ இராணுவ​ மரியாதை அணிவகுப்பின் போது, சிங்களச் சிப்பாய் ஒருவர் திரு ராஜீவ் காந்தி அவர்களை துப்பாக்கியால் தலையில் தாக்கி கொல்ல​ முயன்றார். இன்று வரை இந்திய அரசு அந்தச் சிங்கள​ சிப்பாயை தண்டிக்கும் படி இலங்கை அரசைக் கேட்கவில்லை. பின்னாளில் இலங்கை அரசு அந்தச் சிப்பாய்க்கு பதவிகளும் பரிசுகளும் வழங்கி கௌரவித்தமை வேறு கதை. சிங்கள​ அரசுகளும், சிங்கள​ மக்களும் இன்று வரை இந்திய​ அரசையோ, மக்களையோ பெரிதாக​ எடுப்பதில்லை. அவர்கள் நடவடிக்கைகள் பற்றி பெரிதாக​ அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் தமிழ் மக்கள் அப்படியில்லை. உலகில் உள்ள​ தமிழர்கள் எல்லோரையும் தங்கள் சொந்தம் என்று எண்ணுபவர்கள். அதிலும் தமிழகத்தையும், தமிழக​ மக்களையும் தங்கள் உயிராகவே இன்று வரை நினைத்திருப்பவர்கள். ஆனால் தமிழர்களுக்குள்ள​ ஒரே சாபக்கேடு மிகச் சுலபமாக​ சுயநலன்களுக்கு விலை போய் விடுவது தான். குடும்ப​ நலன்கள், குடும்ப​ அரசியல் ,போட்டி, பொறாமைகள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் போன்ற​ இவை எல்லாவற்றிட்காகவும் பொதுநலன்களை குழி தோண்டிப் புதைத்து விடுவது தான்.

திரு. எம் ஜி ஆர் அவர்களின் காலத்திற்கு பின்னர், இந்திய​, தமிழக​ தமிழ் அரசியலிலும் சரி, இலங்கை தமிழ் அரசியல் வாதிகளிலும் பெரும்பாலோரும் சரி இதையே செய்து வருகின்றார்கள். சிங்கள​ மக்களும், சிங்கள​ அரசியல் வாதிகளும் நாடு, மக்கள் , அரசு என்று வரும் போது, பொது எதிரிக்கெதிராக​ ஒன்றாக​, இறுக்கமாக​ கை கோர்த்து விடுகின்றார்கள். இதில் பௌத்தமத குருமாரும் விலக்கல்ல​. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தான் முன்னணியில் இருப்பார்கள். குறிப்பாக​ கூறினால் இன்றுவரை தமிழ் மக்களுக்காக​ எடுக்கப்பட்ட​ எந்த​ முடிவுகளிலும் பிரிந்து நின்றதில்லை.

ஆனால் நாம் இன்று என்ன​ செய்து கொண்டிருக்கின்றோம்..?கடந்த​ வருடம் முள்ளி வாய்க்கால் அவலங்களின் போது , உலகம் முழுவதிலும் உள்ள​ தமிழர்கள், பாராளுமன்றங்கள், மனித​ உரிமைகள் நிறுவனங்கள், வெள்ளை மாளிகை, ஜக்கிய​ நாடுகள் சபை, தலைமை செயலகம், என்று எல்லா இடங்களிலும் ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றக் கோரி இலட்சக் கணக்கில் ஒன்று சேர்ந்தோம். எங்கள் எழுச்சியையும், ஒற்றுமையையும், தமிழ் உணர்வையும் பார்த்து உலகமே வியந்து நின்றது. இதனைப் பார்த்து இலங்கை அரசு திகைத்துப் போனது. தமிழர்களை அழிக்க​ அது போட்டு வைத்திருக்கும் குறிப்பேட்டில் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும், பணபலங்களையும், தமிழீழ​ விடுதலையில் அவர்கள் கொண்டுள்ள​ ஆத்மார்த்தமான​ ஈடுபாட்டையும் உடைப்பதற்கும், சிதைத்தழிப்பதற்கும் சிவப்பு மையால் எழுதிக் கோடிட்டுக் கொண்டது.

சுனாமி அனர்த்தங்களினால் பாதிக்கப் பட்ட​ வடக்கு, கிழக்கு மக்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென​ வெளிநாடுகளினால் வழங்கப்பட்ட​ நிதிகளைக் கொண்டு , தமிழர்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இலங்கை அரசு. அதன் முதற்கட்ட​ நடவடிக்கைகளாக

1.வெளிநாடுகளில் உள்ள​ இலங்கை தூதரகங்கள் மூலமாக​ புலம்பெயர் தமிழர்களில் வாங்க​ முடிந்தவர்களை வாங்குவதும், அவர்கள் மூலமாக, புலம் பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் விடுதலை நோக்கி எடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்புவதும், அவதூறு பரப்புவதும், குற்றச் செயல்களில் ஈடுபடச் செய்வதும்………

2.உள்நாட்டில் கைது செய்யப்பட்ட​ தமிழ் இளைஞர்களை மிரட்டல்,வதைகள் மூலம் பணிய​ வைக்கப்பட்டு உள்நாட்டு,புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை தவறானசெய்திகளால் குழப்புவதும்….

3.ஒட்டுக்குழுவினரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி கொடுத்து புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதன் மூலமும் …

4.மிக​ முக்கியமாக​ தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென​ வெளிநாடுகளால் வழங்கப்படும் நிதியின் பெருமளவினை, தமக்கு அரசியல், இராஜதந்திர​ ஆலோசனைகளை வழங்குவதற்காக​ வெளிநாட்டு நிபுணத்துவ​ ஆலோசனை முகவர்களை, பெரும் நிதிச் செலவில் அமர்த்தியுள்ளது…

இந்த​ வகையான​ இலங்கை அரசின் நடவடிக்கைகளினூடே நாம் எமது மக்களின் விடுதலை நோக்கி எப்படி நகர்ந்து செல்லலாம் என்று இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம் ….

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.