பயணிகள் மீது ஓமந்தையிலும் ஆனையிறவிலும் இராணுவத்தினர் கெடுபிடி

வடபகுதி நோக்கியும், அங்கிருந்து தென்பகுதி நோக்கியும் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது சிறிலங்கா படையினரின் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து சிறிலங்கா படையினர் பயணிகளை மீண்டும் உடற்சோதனைக்குள்ளாக்கி வருகின்றனர்.

வவுனியா நோக்கிச் செல்லும் பயணிகளும், வடபகுதி நோக்கிச் செல்லும் பயணிகளுமே இவ்வாறு உடற்சோதனைகுள்ளாக்கப்படுவதுடன் அடையாள அட்டைகளும் சோதனையிடப்படுகின்றன.

அத்துடன் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள், பொதிகளும் படையினரால் கடுமையாகச் சோதனையிடப்படுகின்றன.

அத்துடன் அடையாள அட்டை இல்லாத எவரையும் ஓமந்தை சோதனைச் சாவடியைக் கடந்து செல்வதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

அதேவேளை, ஆனையிறவு தடைமுகாமில் வைத்து வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையையும் சிறிலங்கா படையினர் மீளவும் ஆரம்பித்துள்ளனர்.

குடாநாட்டுக்குச் செல்லும் வாகனங்களும், வெளிச்செல்லும் வாகனங்களும் ஆனையிறவுத் தடைமுகாமில் பதிவு செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்புக் கெடுபிடிகள் மீளவும் அதிகரித்திருப்பதால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.