பசில் தலைமையிலான சிறிலங்காவின் உயர்மட்டக் குழு அடுத்த மாதம் இந்தியா செல்கிறது

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான உயர்மட்ட அரசாங்க குழு அடுத்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் குழுவில் சிறிலங்கா அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாத நடுப்பகுதியில் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவின் பயணம் இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜப்பானுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு அமைச்சர் பசில் ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் நேற்று கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள் நாடு திரும்பியதும் இந்தியப் பயணத்துக்கான திகதி பற்றிய தீர்மானம் எடுக்கப்படும்.

அதேவேளை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

அவர் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே கொழும்புக்கு திரும்புவார்.

எனவே சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு பெரும்பாலும் அடுத்த மாத நடுப்பகுதிலேயே இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் என்று தெரிய வருகிறது.

இந்தக் குழுவின் இந்தியப் பயணத்தின்போது இருதரப்பு மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து முக்கியமாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், போர் முடிவுக்கு வந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு போன்ற விடயங்கள் குறித்து இந்தியத் தலைவர்களிடம் இந்தக்குழு விரிவாக எடுத்துக் கூறத் திட்டமிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.