கருணா கையாலாகாதவர்! பிள்ளையான் பல்லு பிடுங்கப்பட்ட பாம்பு!

ஆளும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாணத்தில் காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகின்றமையைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்.

அதே போல் கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக முடிசூடப்பட்டிருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனால் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக அரசின் ஊதுகுழலுக்கு ஏற்ப ஆடத்தான் முடிகிறதே தவிர கிழக்கு மாகாண தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திட முடியாமல் இருக்கின்றமையும் உறுதியாகிறதுஎன்று கிழக்கு மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப் -பத்மநாபா கட்சி உறுப்பினரான இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குரிய 1400 ஏக்கர் காணியில் 1050 ஏக்கர் காணி கடற்படையினரின் பாவனைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

”இப்பண்ணை கடற் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளமையால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மர முந்திரிகை உற்பத்தியில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரும். பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரடியாக இவ்விடயத்தைத் தெரிவித்தேன். ஆனால் அவரிடம் இருந்து சாதகமான பதில் எதும் கிடைக்கவில்லை கடந்த வருடம் போர் முடிந்ததில் இருந்து வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள நிலங்கள் அரசினால் பெரிய அளவில் அபகரிக்கப்பட்டு வருவது வெளிப்படை.

ஆளும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த அபகரிப்புக்கள் தொடர்பாக அரசுடனும், ஜனாதிபதியுடனும் பேசி உரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்று ஊடகங்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் வடக்கில் மட்டுமல்ல அவருடைய மாவட்டமான மட்டக்களப்பிலேயே காணிகள் அபகரிக்கப்படுகின்றமைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் கையாலாகாத நிலையில் அவர் இருக்கின்றார் என்பது புலனாகின்றது.

இதே போல் கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக முடிசூடப்பட்டிருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனால் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக அரசின் ஊதுகுழலுக்கு ஏற்ப ஆடத்தான் முடிகிறதே தவிர கிழக்கு மாகாண தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க முடியாமல் இருக்கின்றமையும் உறுதியாகிறது.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.