பாலகுமார், யோகி படுகொலை மீண்டும் உறுதியானது! தடுப்புக் காவலில் இல்லை என்கிறது சிறிலங்கா!

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரமுகர் க.வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினரான யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளமையை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுள் அவ்வியக்கத்தின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், யோகி ஆகியோர் இல்லை என சிறிலங்கா படைத்துறையின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான ஐலன்ட் எனும் பத்திரிக்கைக்கு இவர் வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் போராளிகளில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், யோகி ஆகியொரும் அடங்கியுள்ளனரா என பத்திரிகையின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, தடுப்புக் காவலில் உள்ளவர்களில் இவர்கள் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, வன்னிப் போரினால் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் விதவைகளான பெண்களை சந்தித்தமை குறித்து ஐலன்ட் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ.குணசேகர, தான் சந்தித்த விதவைப் பெண்களில் க.வே. பாலகுமாரனின் மனைவி மற்றும் யோகரட்ணம் யோகியின் மனைவியும் உள்ளடங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அமைச்சர் டி.யூ.குணசேகர இப் பத்திரிகைக்கு குறிப்பிட்டிருந்தார்.

வன்னியின் கிழக்குப் பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது பாலகுமாரன் கொல்லப்பட்டு விட்டதாக இப் பத்திரிகைக்கு குறிப்பிட்ட அவர், யோகி எங்கே, எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை.

ஆனால், பின்னர் பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான பாலகுமார் மற்றும் யோகி ஆகியோரின் நிலைமைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இது குறித்த விவாதங்களில் இறங்கத் தான் தயாராகவில்லை எனவும் அமைச்சர் டி.யு.குணசேகர தெரிவித்திருந்தார்.

இந் நிலையில், தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுள் அவ்வியக்கத்தின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், யோகி ஆகியோர் இல்லை என சிறிலங்கா அரசின் சார்பில் அதன் படைத்துறையின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, படையினரிடம் சரணடைந்த பாலகுமாரன், யோகி ஆகியோரின் நிலை குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் குழப்பமடைந்த சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இவ் விவகாரம் குறித்து அடுத்த வாரம் பதிலளிப்பதாக கூறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே.பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்திருந்தனர்.

இவர்கள் இருவரும் கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிறிலங்காவின் படைத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் கடந்த வருடம் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இதற்குப் பின் கடந்த வருடம் நடுப்பகுதிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக ஒரு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்த போதும், அவ்வூடகம் இச் செய்தியை உறுதிப்படுத்தியிருக்கவில்லை.

இந் நிலையிலேயே, தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோகி ஆகியோர் தடுப்புக் காவலில் இல்லை என பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளமை முக்கிய சாட்சியமாகக் கருதப்படுகின்றது.

இதனுடாக, வன்னி இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்திருந்த க.வே.பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரே சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்து விட்டமை உறுதியாகியுள்ளது.

அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சிறிலங்கா அரசு அது வரை அவ்விபரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.