இந்திய – சீனா யுத்தத்தின் முடிவில் இலங்கைத் தீவு இரண்டாகும்!

சர்வதேச அரசியல் உறவுகளைச் சரிவரப் புரிந்து அவற்றை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாள்வதிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் பெரிதும் தங்கியுள்ளது. தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஒர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல.

அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனை என்ற மிக எளிமையான அடிப்படை உண்மையை பெரிதும் கருத்திலெடுக்கத் தவறியமையின் விளைவே கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் தோல்விகளுக்கான மையப் புள்ளியாய் உள்ளது. இவ் வகையில் சர்வதேச யதார்த்தத்தை சரிவரப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பொருத்தமான வகையில் எம்மை மறுசீரமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் வேண்டிய இரு முக்கிய பணிகள் உடனடித் தேவைகளாய் உள்ளன.

தற்போதைய சர்வதேச அரசியல் உறவை ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய மனோபாவங்களாலும், இறுகி, கட்டிபற்றிப் போயுள்ள பழைய வரண்ட சித்தாந்தங்களினாலும், வெறும் நம்பிக்கை வேகத்தினாலும் பரிசீலிப்பதை கைவிட்டு புதிய உயிர்த்துடிப்புள்ள நடைமுறைக்குப் பொருத்தமான வகைகளில் மிகுந்த மதிநுட்பத்துடனும் இராஜதந்திர மெருகுடனும் அணுக வேண்டியது அவசியம்.

இருப்பதை வைத்துக்கொண்டுதான் எதையாவது செய்தாக வேண்டுமே தவிர கற்பனை வேகத்தில் வானளாவப் பாய முடியாது. வரலாறு எம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறதோ அங்கிருந்துதான் நாம் எமது அடுத்த கட்டப் பிரயாணத்தை ஆரம்பிக்க முடியும்.

இராமநாதன் முதல் பிரபாகரன் வரை தோல்வி ஒரு தொடர் கதையாய் உள்ளது. யதார்த்தத்தை சரிவரக் கிரகித்து வெளிநாட்டுச் சக்திகளை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாள்வதன் மூலம் இலங்கைத் தீவில் ஈழத் தமிழரையும், ஏனைய இன மதத்தவர்களையும் தொடர்ந்து தோற்கடித்து வருவதில் சிங்களத் தலைமைகள் வெற்றி பெற்று வருகின்றன.

சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தோற்கடித்து வருவது தமிழ் தலைவர்களை மட்டுமல்ல, கூடவே இந்தியாவையும் கடந்த 2250 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தோற்கடித்து தம் இருப்பை பாதுகாத்து வருவதுடன் சீனாவைக் காட்டி இந்தியாவிற்கு தற்போது அச்சமேற்படுத்தத் தொடங்கியுள்ளனர். அத்துடன் அமெரிக்கா உட்பட மேற்குலகத்திற்குச் சவால் விடக்கூடிய நிலையையும் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வெற்றிநடை போடுவதற்கு அவர்களது சர்வதேச அரசியல் பற்றிய புரிதலும், அவர்களது மதிநுட்பம் நிறைந்த இராஜதந்திர அணுகுமுறைகளுமே காரணமாகும்.

ஒரு சிறிய தேசத்தின் முதன் நிலை ஆயுதம் இராஜதந்திரமே தவிர புஜபலமல்ல. வலுவான மக்களாதரவினால் அரணமைக்கப்பட்ட இராஜதந்திரத்தை எவர் கொண்டிருக்கிறாரோ, அவர் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பார். அரசியல் ஆடுகளத்திற் குதிப்போருக்கான பிரதான அணிகலன்களாய் மக்களாதரவு, சர்வதேச அரசியல் பற்றிய புரிதல், மெருகான இராஜதந்திரம் என்பன அமைகின்றன.

எதிரி பரிதாபமான தோல்வியை மட்டும் எமக்குத் தரவில்லை, கூடவே மகத்தான படிப்பினைகளையும் எமக்குத் தந்திருக்கின்றார். உண்மையாகவே யதார்த்தத்தில் காணப்படும் சாதகமான வாய்ப்புகளைக் கண்டறிந்து வெற்றிக்கு வழி அமைக்க வேண்டியது அவசியம். தோல்வி கண்ட வழிகளைக் கைவிட்டுப் புதிய வழிகளைத் தேடியாக வேண்டும்.

உணர்ச்சி வேகத்திற்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் எம்மை, எமது சிந்தனை முறைமைகளை, அணுகுமுறைமைகளை, சமூக விழுமியங்களை எமது பாதைகளை நாம் மறுசீரமைப்புச் செய்தாக வேண்டும். அணுகுண்டு வீச்சுக்கு இலக்காகி ஹிரோஷிமா, நாகசாயி நகரங்கள் பரிநாசமானபோது யப்பானிய மக்கள் தமது கோபத்தையும், ஆவேசத்தையும் புதிய எண்ணங்களாக உருமாற்றி தலையெடுக்கத் தலைப்பட்டது போல நாமும் நவீன எண்ணங்களுடன் உன்னதமான பாதையில் தலையெடுக்கத் தலைப்படவேண்டும்.

எம்முன் இப்போது இரண்டு பணிகள் முதன்மையாய் உள்ளன. ஓன்று முற்றிலும் ஜனநாயக வழியில் எம்மைப் புதுப்பொலிவுடன் மறுசீரமைப்பதற்கான சிந்தனையை முன்வைத்தல், இரண்டாவது சர்வதேச அரசியலைச் சரிவரப் புரிந்து அதற்குப் பொருத்தமாக எம்மை நெறிப்படுத்துவதற்கான சிந்தனையை முன்வைத்தல் என்பனவாகும்.

இக்கட்டுரை இதில் இரண்டாவது பணியினை நிறைவேற்றுவதற்கான ஒரு சிந்தனை முயற்சியாய் அமைகிறது. ‘ஏகாதிபத்தியம்’; என்ற பதம் மிக அபத்தமாகப் பொருள் கொள்ளப்படுவதுடன், அது மிகவும் குருட்டுத்தனமாகவும் பிரயோகிக்கப்படுகிறது. அத்துடன் அரைநூற்றாண்டாய் பனிப்போர் சிந்தனை முறைமைக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த மூளைகள் பனிப்போர் முறைகள், பனிப்போர் மனோபாவத்திற்கு ஊடாகவே சர்வதேச அரசியலை நோக்குகின்றன.

இவை இரண்டும் நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தடையாய் இருப்பதுடன், நடைமுறை சார்ந்து ஆபத்தானவையாயும் உள்ளன.

ஏகாதிபத்தியம் என்ற பதத்தை அநேகமாக காலனிய ஆதிக்கம் என்ற கருத்துப் படிமத்திற்குள்ளால் பார்க்கும் போக்கு வலுவாகக் காணப்படுகிறது. இது அதிகம் பொருளாதார அர்த்தத்தில் சந்தை ஆதிக்கத்திற்கான ஏகபோகத்திற்கு உள்ளாலும், நிதிமூலதன ஆதிக்கத்திற்கு உள்ளாலும் புரிந்து கொள்ளப்படவேண்டிய பதமாய் உள்ளது. இந்த வகையில் சந்தை பிடிப்பதற்காக வர்த்தக ஏகபோக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடும் எந்தொரு நாடும் ஏகாதிபத்திய நாடேயாகும்.

‘ஏகாதிபத்தியம்’; எனும் பதத்தை பழைய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதால் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை மட்டும் ஏகாதிபத்தியம் என்று சொல்லிக் கொண்டு புதிதாக அரசியற் பொருளாதார ஏகாதிபத்திய ஆதிக்கப் போட்டியில் ஈடுபடும் நாடுகளின் வல்லாதிக்கப் போக்குகளை புரிந்து கொள்ளவும் சரியான அரசியல் தீர்மானம் எடுக்கவும் தவறுகிறோம். இது தேசிய இனப்பிரச்சனையிலும் மற்றும் உள்நாட்டு அரசியலிலும், சர்வதேச அரசியலிலும் பிழையான நிலைப்பாடுகளை எடுக்க வைப்பதுடன் தேசிய ஒடுக்குமுறைமைகளை நியாயப்படுத்தவும் அத்தகைய ஒடுக்கு முறைகளுக்குத் துணைபோகவும் வழிவகுத்து விடுகிறது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதனால் அதனை ஒரு சோசலிச நாடென்று நினைத்துக் கொண்டு சீனாவை ஏகாதிபத்திய நாடுகளின் பட்டியலில் இருந்து விலக்கிப் பார்க்கும் ஒரு தவறான போக்கு இருக்கிறது. வர்த்தக நிதிமூலதன ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுகின்ற நாடு எதுவாயினும் அது ஏகாதிபத்திய நாடு தான். வர்த்தகமே சுரண்டலினதும் ஏகப்பரந்த பொருளாதார சூறையாடலினதும் உயிர்நாடி. ஆசியா முழுவதிலும் சீனா தனது வர்த்தக ஆதிக்கத்தை உருவாக்கி உள்ளதுடன், அது கண்டங்களையும் கடந்து புவியடங்கலுமான வர்த்தக வழி சுரண்டல் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய வர்த்தகம் மற்றும் கடல்வழி ஆதிக்கத்திற்கான போட்டி உலகப் பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான யுத்தமாக வெடிக்கக்கூடிய ஆபத்து மிகத் தெளிவாகவே தெரிகிறது. அத்தகைய யுத்தத்தில் இலங்கைத்தீவு மிக முக்கிய புள்ளியாக அமையும். அதில் இனப்பிரச்சனை ஒரு தனிப்பரிமாணம் பெறும்.

இதனைத் துல்லியமாக புரிந்து கொள்வதற்காகவும்; ஏகாதிபத்தியத்தின் தற்போதைய இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகவும் அதன் வழி சர்வதேச அரசியல் போக்கை சரிவர மதிப்பிட்டு அதற்கேற்ப எமது தலைவிதியை நிர்ணயிப்பதற்காகவும் அரசியல் பொருளாதார ரீதியில் இதனை வேரிலிருந்து விழுது வரை ஆராயவேண்டிய அவசியமுண்டு. அவற்றை இனி சரிவரப் பாரப்போம்.

காலனித்துவமானது நான்கரை நூற்றாண்டுக்கு மேல் நீடித்த மேற்குலகத்தினது அரசியற் – பொருளாதார – இராணுவக் கோட்பாடாயும், நடைமுறையாயும் அமைந்தது. இக் காலனி ஆதிக்கத்தை பொதுவாக ‘ஏகாதிபத்தியம்’ என்ற ஒரு பொதுப் பதத்தால் அழைத்தாலும் ஏகாதிபத்தியம் எனும் பதம் ‘பழைய ஏகாதிபத்தியம்’, ‘புதிய ஏகாதிபத்தியம்’ என்று இரண்டாக வகைப்படுத்தப்படும். இதன்படி காலனி ஆதிக்கம் பழைய ஏகாதிபத்தியம் என்ற பிரிவுக்குள் அடங்குகிறது.

முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பானது வளர்ந்து அது ஏக போக பொருளாதாரமாக மாறிய முதலாளித்துவத்தின் உச்சக்கட்டத்தை புதிய ஏகாதிபத்தியம் என்பது குறிக்கிறது. காலனித்துவ ஆதிக்கம் என்பது ஒரு பேரரசு நேரடியாக இன்னொரு அரசையோ அரசுகளையோ இராணுவ ரீதியில் ஆக்கிரமித்து அங்கு தமது குடியேற்றங்களை நிறுவி அதன் மூலம் பொருளாதாரக் கொள்ளையில் ஈடுபடும் நடைமுறையாகும். குடியேற்றங்களை செய்ய தம்மிடம் மக்கள் தொகை இல்லாத இடத்து இராணுவ ஆதிக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரக் கொள்ளையில் ஈடுபட்டதும் காலனித்துவம் என்றே அழைக்கப்டும்.

ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்க நாடுகள் இவ்வாறு மேற்குலகின் ஆதிக்கத்திற்கு நேரடியாக உட்பட்ட காலகட்டம் வரலாற்றில் சுமாராக நான்கரை நூற்றாண்டுகளைக் கொண்டது. இது கி.பி 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீண்ட காலமாகும். காலனித்துவம் தோன்றிய காலத்தில் முதலாளித்துவம் எனும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு இருந்திருக்கவில்லை. மத்திய கால நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து வணிகவாதம் எழுச்சி பெறத் தொடங்கிய பின்னணியிலிருந்தே காலனிய ஆதிக்கவாதம் தோன்றியது. காலனித்துவ பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மூலதனத் திரட்சியும் மூலதனக் குவிவும்தான் முதலாளித்துவத்தை மேற்குலகில் உருவாக்கியது. அந்த மூலதனக் குவிவானது மேற்கில் கைத்தொழில் புரட்சி உருவாகவும் அங்கு தேசிய வாதம் தோன்றவும் வழிவகுத்தது.

காலனிய ஆதிக்கத்தின் தலைமகனாக முதலாளித்துவம் உருவானது. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமானது அந்த முதலாளித்துவத்தின் பிரதான பொறிமுறைகளான விலைப் பொறியகம், நிறைபோட்டி என்பவற்றை தகர்த்து உடைக்கின்ற ஏகபோக சந்தை ஆதிக்க, நிதி ஆதிக்கப் போக்காய் புதிய ஏகாதிபத்தியம் தோன்றியது. நாம் இப்போது ஏகாதிபத்தியம் என்று பொதுவாக சொல்லுவது இந்த புதிய ஏகாதிபத்தியத்தின் வரவைத் தொடர்ந்து வளர்ந்து வரும் அரசியற் பொருளாதார ஆதிக்கத்தைத்தான். இந்த ஏகாதிபத்தியமானது காலனித்துவம் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த அதன் நான்கு நூற்றாண்டுகள் பூர்த்தியாகிக்கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோன்றி இற்றைக்குச் சுமாராக ஒன்றேகால் நூற்றாண்டை அது பூர்த்தியாக்கியுள்ளது. இது காலனித்துவம் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தோன்றிய முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாய் அதுவும்; காலனித்துவம் சரிய முன்பே தோன்றிய ஒன்றாய் இந்த புதிய ஏகாதிபத்தியம் உள்ளது.

வரலாறு தொடர்ந்து வளர்ந்து செல்கிறது. அது ஒருபோதும் ஒரேமாதிரியாக இருக்க மாட்டாது. ஆதிக்கங்களும், ஆக்கிரமிப்புக்களும் காலத்திற்கும், இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப புதுவழக்கங்களைப் பெறும். காலனிய ஆதிக்கம் எனும் பழைய ஏகாதிபத்தியம் வரலாற்றில் அவமானகரமாய் தோற்கடிக்கப்பட்டதுடன், அந்த ஆதிக்கம் இன்னொரு புதிய வடிவில் புவியெங்கும் பரவியுள்ளது. அதுவே ஏகபோகத்திற்கான சந்தை – வர்த்தக – நிதிமூலதன ஆதிக்கக் கட்டமைப்பாகும். எனவே இந்த சந்தைபிடி வர்த்தக நிதி மூலதன ஆதிக்கப் போட்டியில் எந்தொரு நாடு ஈடுபட்டாலும் அது ஏகாதிபத்திய நாடேயாகும்.

இதனை சற்று விரிவாகவும் சற்று ஆழமாகவும் பின்நோக்கி முன்வருவோம். காலனிய ஆதிக்கத்தின் விளைவாக பிரித்தானியாவில் மூலதனக் குவிவு பெரிதும் ஏற்பட்டதால் அங்கு முதலில் கைத்தொழிற் புரட்சி ஏற்படுவது சாத்தியமானது. இதனால் மேற்கைரோப்பாவில் முதலாளித்துவம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. இதன் விளைவாக இப்பகுதியிற்தான் கைத்தொழில் பண்ட உற்பத்தி முதலாளித்துவ வளர்ச்சியுடன் இணைந்து அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்ப, ஜனநாயகம், மக்கள் நிறுவன அமைப்பு முறைகள் என்பன பெரிதும் வளரத் தொடங்கின. எனவே இத்தகைய வளர்ச்சிகளின் பின்னணியில் சோசலிசப் புரட்சி முதலில் மேற்படி பகுதியைக் சேர்ந்த பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளிலேயே ஏற்படுமென கார்ல் மாக்ஸ் எதிர்பார்த்தார். அதாவது சோசலிசப் புரட்சிக்கு முதலாளித்துவ வளர்ச்;சி முன்நிபந்தனை என கார்ல் மாக்ஸ்; விளக்கியிருத்தார் என்பதே இதன் அர்த்தமாகும். இதன் மிக ஆழமான உட்பொருளும் சாராம்சமும் என்னவெனில் சோசலிச சமூக விருத்திக்கு கைத்தொழிற் பண்ட உற்பத்தியும் தொழிநுட்ப வளர்ச்சியும் மிக அடிப்படையானது என்பதாகும்.

ஆனால் சோசலிச புரட்சி முதலில் ஏற்பட்டது முழுவளர்ச்சி அடைந்த முதலாளித்து நாட்டிலன்றி அத்தகைய கைத்தொழில் அரை வளர்ச்சி அடைந்திருந்த ரஸ்யாவிலாகும்.

கைதொழில் வளர்ச்சியடைந்த மேற்கூறிய நாடுகளில் சோசலிச புரட்சி முதலில் ஏற்படாததற்கான பிரதான காரணம் அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் உலகில் ஏனைய பகுதிகளில் கொள்ளையடித்தும் சுரண்டியும் சென்ற பெருவாரியான செல்வத்தின் ஒரு பகுதியை தமது நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு வகை இலஞ்சமாய் கிள்ளித் தெளித்தனர். இதன் மூலம் இந் நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் ஏனைய நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வேறுபட்டு Labour Aristocracy எனப்படும் தொழிலாளப் பிரபுத்துவ நிலையை அடைந்தனர்.

உலகின் ஏனைய நாடுகளின் தொழிலாளரை விடவும் இவர்களுக்கு உயர்ந்த ஊதியம், சலுகைகள், வீட்டுவசதிகள், சமூக நலன்பேண் நடவடிக்கைகள் என்பவற்றின் மூலமும் கைத்தொழிலை யுத்ததளபாட தயாரிப்புக்கு மாற்றியமைப்பதன் மூலமும் இத் தொழிலாளர்களுக்கு பங்கிடப்படும் ஒருவகை உயர்தபட்ச ஊதியம் என்பவற்றின் வாயிலாகவும் இத் தொழிலாளப் பிரபுத்துவ ஏற்பாடு சாத்தியமானது. உலகின் ஏனைய தொழிலாளி வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் இனங்களையும் இராணுவ ரீதியில் கொன்றொழிக்கவும் ஒடுக்கவும் மேற்படி தொழிலாளி வர்க்கம் தயாரிக்கும் இராணுவ தளபாட கைத்தொழில் உற்பத்தி ஒரு காரணியாய் செயல்படுதையும் இங்கு அவதானித்தல் அவசியம்.

இந்த நாடுகளின் தொழிற்சங்கங்களும் இத்தகைய பின்னணிக்குப் பொருத்தமான பிற்போக்கு பாதையையே சர்வதேச அரங்கில் பின்பற்றின. இது தொழிலாளர் வர்க்கத்தை ஒரு பக்கமாய் வீங்கிப் பெருத்த சமச்சீரற்ற வளர்ச்சிக்கு (Uneven development) இட்டுச்சென்றது. இது புரட்சிக்கு எதிர் நிலை வளர்ச்சியாய் அமைந்தது.

அதேவேளை அரை முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருந்த ரஸ்யாவின் மீது முதலாம் உலக யுத்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்த சுமையானது அங்கு புரட்சியை வெடிக்க வைத்தது. கைத்தொழில் வளர்ச்சி அடையாத நாட்டில் அப்புரட்சி வெடித்ததால் அங்கு சோசலிசப் பொருள் உற்பத்தி வெற்றி பெற மறுத்தது. இதனை விரைவாக புரிந்து கொண்ட லெனின் 1921ஆம் ஆண்டு NEP எனப்படும் புதிய பொருளாதாரக் கொள்ளையை நடைமுறைப்படுத்த தொடங்கினார். இதன் மூலம் சிறு முதலாளித்துவ உற்பத்தியையும் அரச முதலாளித்துவ உற்பத்தியையும் உள்வாங்கிய சோசலிச உற்பத்திக்கு திட்டமிட்டார். அது அவரின் நுண்ணறிவில் சிறப்பாக உதயமானாலும் பின்வந்த ஆட்சியாளர் அதனை அரச முதலாளித்துவ சமூக ஏகாதிபத்தியத்திற்கு இட்டுச் சென்றனர். அதன் தொடர் விளைவாக சோவியத் யூனியன் 1989ஆம் ஆண்டு வீழ்ந்து நொறுங்கி இன்று உலகலாவிய ஏகாதிபத்திய சந்தையில் அலை மோதிக் கொண்டிருக்கின்றது.

1949ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெற்ற சீனாவிலும் மேற்படி ரஸ்சியாவில் காணப்பட்டது போன்ற கைத்தொழில் வளர்ச்சியின்மை நிலவியதால் அங்கும் சோசலிச பொருளாதாரம் பெரிதும் ஊசலாடியது. இப்பின்னணியில் 1970 களின் மத்தியில் மா ஓ சேதுங் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் உடன் கைகோர்த்ததன் மூலம் சீனப் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய வர்த்தக பொருளாதாரத்திற்குள் இழுத்துவிட்டார்.

அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த டெங்சியா ஓபிங் ‘பூனை கறுப்போ, வெள்ளையோ அது எலி பிடித்தால் போதும்’; என்ற கொள்கையின் அடிப்படையில் நால்வகை நவீன மயமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் சீனாவை முற்றிலும் ஏகாதிபத்திய யுகத்துள் தள்ளிவிட்டார்

மேஜி புரட்சி (Maji Restoration) எனப்படுகின்ற நவீனமயமாக்கல் திட்டத்தை 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் யப்பான் மேற்கொள்ளத் தொடங்கியது. அந்த நவீன மயமாக்கம் யப்பானை இரண்டாம் உலக யுத்தத்திற்குள் பாரியளவில் தள்ளிவிட்டது. சீனாவில் டெங்கால் தோற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் பாதையிலான நவீனமயமாக்கலும் நிச்சயம் சீனாவை ஒரு பெரும் யுத்தத்திற்குள் தள்ளும்.

டெங்கினது நால்வகை நவீனமயமாக்கற் திட்டத்தின் கீழ் தனியார் மயப்படுத்தப்பட்ட அரச முதலாளித்துவ ஏகாதிபத்தியப் பாதை தோற்றுவிக்கப்பட்டது. இது சுமாராக கால் நூற்றாணடு காலத் திட்டமாகும். ஏறக்குறைய 2000ஆம் ஆண்டை அண்டி இத்திட்டத்தின் பெருவெட்டான இலக்கு அடையப்பட்டிருக்க முடியும்.

விவசாயம், கைத்தொழில், தொழில்நுட்பம், இராணுவம் என்பனவே இந்த நால்வகை நவீனமயமாக்கலுக்கு உட்படும் அம்சங்களாகும். இத்திட்டமானது இதன் முதல் அரைப்பகுதி காலத்திற்குள் சீனாவில் உள்நாட்டு சந்தையை ஓரளவு நிரப்பிவிடக்கூடியது. அதன் தொடர் வளர்ச்சியால் அது உள்நாட்டு சந்தையை நிரப்பி வெளியே வழியத் தொடங்குவது இயல்பு.

தனது உற்பத்தியைத் தொடர்ந்து பேணி மீள் உற்பத்திக்குப் போகவும், பட்டாளமெனப் பெருகும் வேலையற்றோருக்கான வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் தனது சந்தையை வர்த்தக நோக்கில் வெளிநாடுகளை நோக்கி விரிவாக்க வேண்டியது சீனாவுக்கு அவசியமாகும். இந்த சந்தை பிடி போட்டி ஏகாதிபத்தியப் போட்டியாக அமைகின்றது. இந்த ஏகாதிபத்திய சந்தை ஆதிக்கப் போட்டியில் சீனா கடந்த ஒரு தசாப்பத்திற்கு மேலாக மிகப் பெருவளர்ச்சி அடைந்து வருகிறது.

வெளிநாடுகளைச் சுரண்டும் ஏகாதிபத்திய வர்த்தக ஆதிக்கத்தின் மூலமே சீனா பெருகிவரும் தனது சனத்தொகைக்கு உணவுபோடவும் தனது தொழிலாளர்களுக்கு சற்று மேலான ஊதியம் வழங்கவும், அதன் மூலம் தனது ஆதிக்கத்தை அரச கட்டிலில் பேணவும் முடியும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்குலக ஆட்சியாளர் தெளிவாக Labour Aristocracy க்கு போய்விட்டனர். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனாவும் Labour Aristocracy யில் தெளிவாகக் கால் பதித்து விட்டது.

உலகளாவிய தொழிலாளர்களை வர்த்தகத்தின் மூலம் சுரண்டி, சீனத் தொழிலாளர்களை மேல் நிலைப்படுத்தும் அரச முதலாளித்துவ ஏகாதிபத்தியமே சீனாவின் இன்றைய உலகளாவிய அரசியற் பொருளாதாரமாய் உள்ளது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் வரை சீனா தனது சந்தையை விரிவாக்கி வருகின்றது. அமெரிக்கா, யப்பான், ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா என்பனவற்றுடன் சீனா தனது ஏகாதியத்திய வர்த்தக ஆதிக்கபோட்டியில் ஈடுபட்டுள்ளது. இவற்றுள் சீனாவின் முன் தோன்றும் பலவீனமான நாடும், சீனாவிற்கு வசதியான நாடும் இந்தியாதான். எனவே, ஏகாதிபத்திய பொருளாதார முரண்பாடு முற்றி வெடிக்கும் போது இந்தியாவுடன்தான் சீனா மோதும் நிலை முதலில் உருவாகும்.

இதனை மேலும் சிறிது தர்க்க பூர்வமாக பார்ப்போம். 1980களின் தொடக்கத்தில் உத்வேகமடையத் தொடங்கிய சீனாவின் நால்வகை நவீனமயமாக்கல் கொள்கை இந்தியாவை உலுக்கத் தொடங்கியது. அமைதிக்கு அபிவிருத்தி அவசியம் என்ற டெங்கின் இராஜதந்திர அணுகுமுறையால் இந்தியாவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் அப்போது ஏற்படவில்லை. இத்தகைய நிலையில் இந்தியாவும் சீனாவிற்கு ஈடுகொடுக்கும் நோக்கில் தனது வழமையான தேசிய முதலாளித்துவம் என்று தான் கூறிக்கொண்ட பொருளாதார கொள்கைக்கு பதிலாக தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக என்று யப்பான் மற்றும் மேற்குலகுடன் கூட்டுப் பொருளாதார உற்பத்தியில் (Collabroration) ஈடுபடத் தொடங்கியது. Hero-Honda Collaboration இவ்வகையானதே. ஆனாலும் சீனாவின் அசுர வேக நால்வகை நவீன மயமாக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் வேகம் பின்தங்கியதாகவே உள்ளது.

தற்போது நிலவும் ஏகாதிபத்தியத்தின் இருதயமாக இருப்பது நிதிநிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் திவாலகத் தொடங்கியமை அந்த ஏகாதிபத்திய அமைப்பிற்கு ஒரு சிவப்பு விளக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி எங்கோ ஒரு பக்கத்தில் யுத்தமாக வெடித்துதான் அது தன்நிலையைச் சமன் செய்யப் போகின்றது.

ஏகாதிபத்திய வர்த்தக நிதிமூலதன ஆதிக்கம் என்னும் ஓரே ஒரு மைய உலக ஒழுங்கே இந்தப் பூமியில் உண்டு. இந்த அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடு அமெரிக்கா. இதில் புதிய போட்டியாளனாய் ஏகாதிபத்திய அரங்குள் நுழைந்திருக்கும் அதிவேக நாடு சீனா. எனவே யுத்தம் சீனாவில் முளை கொள்வதற்கான வாய்ப்பே அதிகம். மேஜி புரட்சியின் மூலமான தனது நவீனமயமாக்கலின் விளைவாய் யப்பான் வளர்ச்சி அடைந்த போது அது 1905ஆம் ஆண்டு ரஸ்யாவுடன் முதலில் முட்டி மோதி யுத்தமாய் வெடிக்க தொடங்கியது. அவ்வாறே சீனாவும் தனது நால்வகை நவீன மயமாக்கலின் நிறைவாக அது இந்தியாவுடன் முட்டி மோதி யுத்தமாக வெடிக்கும் காலம் வெகு தொலைவிலில்லை. ஏகாதிபத்தியப் பொருளாதாரப் போட்டியின் விளைவாக இன்னும் சில வருடங்களுள் யுத்தம் வெடித்துவிடும் என்பது மிகவும் சோகம் நிறைந்த வரலாற்று உண்மையாகும்.

உலகம் என்றால் வர்த்தகம், வர்த்தகம் என்றால் கப்பல், கப்பல் என்றால் கடல், கடல் என்றால் துறைமுகம் என்பதே உண்மை நிலவரமாகும். வர்த்தக ஆதிக்கத்திற்கான கடல் என்ற வகையில் இந்து சமுத்திரமும், துறைமுகம் என்ற வகையில் இலங்கைத் தீவின் துறைமுகங்களும் முக்கியத்துவம் பெறப் போகின்றனவா என்பது ஆழ்ந்த கவனத்திற்குரிய மையக் கேள்விகளாகும். ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பின் முரண்பாட்டால் வெடிக்கப்போகும் இந்த யுத்தத்தை வல்லமை பொருந்திய ஏகாதிபத்திய நாடுகள் தமது அமெரிக்க, ஐரோப்பிய மண்ணில் வெடிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. ஆதலால் அந்த யுத்தம் ஆசிய, இந்து சமுத்திர பிராந்தியத்தில் தான் வெடிக்கப் போகிறது. அப்படி ஒரு யுத்தம் வெடிக்கும் போது மேற்குலகம் இந்தியா பக்கம் சாய்வதை தவிர அதற்கு வேறு வழி இருக்காது.

2012ஆம் ஆண்டுக்கு முன் சீன – இந்திய யுத்தம் வெடிக்குமென்று பாரத் வர்மா கடந்த ஆண்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சீன – இந்திய யுத்தம் வெடிக்குமென்று 1991ஆம் ஆண்டு ஈழத்திலிருந்து வெளியான நூலொன்று கூறுகின்றது. எப்படியோ 2015ஆம் ஆண்டுக்கு முன் யுத்தம் வெடிப்பதற்கான தர்க்கபூர்வ அரசியற் பொருளாதாரப் போக்கு கூர்மை அடைந்து செல்கின்றது.

சீனாவின் ‘அபிவிருத்திக்கான அமைதிக் காலம்’ நிறைவடைந்து யுத்தத்திற்கான மோதற் காலம் தோன்றியுள்ளது. சீனாவுக்கும், இந்தியாவிற்கும் இடையே தற்போது தோன்றி வரும் முறுகற் போக்கு இதனை நிரூபித்து நிற்கின்றது.

தவிர்க்க முடியாதவாறு நிகழப் போகும் இந்த யுத்தத்தின் பின்னணியில் இலங்கைத் தீவு இரண்டாக உடைவதைத் தான் இந்தியா தனது இறுதி தெரிவாக மேற்கொள்ளும் என்பதிற் சந்தேகமில்லை. அதாவது தெற்கே இந்திய உபகண்டத்தின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்பிற்தான் தங்கியுள்ளது. அது தான் முழு இந்தியாவினதும் பாதுகாப்பிற்கான அடிப்படையாகவும் அமையும்.

மகிரிஷி

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.