வெலிக்கந்தையில் ஊசி மருந்து படுகொலை

நூற்றுக் கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் கிழக்கு மாகாண வெலிக்கந்தை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1949ம் ஆண்டின் ஜெனிவா கொன்வென்ஷன் ஒப்பந்தங்களை போர்க்; கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிக் கூறுகின்றது அதன் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் உரிமைகளும் அரசினால் வழங்கப்படவில்லை

ஜெனிவா ஒப்பந்தங்களின் அமுலாக்கப் பொறுப்பு ஜ.சி.ஆர்.சி எனப்படும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டோர்களைப் பார்வையிடுவதற்கு ஜ.சி.ஆர்.சி அனுமதிக்கப்பட வில்லை. பார்வையிடுவதற்கு அது அரசிடம் செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன மே 2010 வரை இந்த நிலவரம் நீடிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், என்று குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் பற்றிய துள்ளியமான தகவல்கள் வெளிவரவில்லை. தீவின் பல பாகங்களில் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பரவலாகக் காணப்படுகிறது வெலிக்கடைச் சிறைச்சாலை, மகசீன் சிறைச்சாலை, பூசா தடுப்பு முகாம் போன்ற சிறைகளில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் அடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது..

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை, எத்தனை தடுப்பு முகாம்கள் உள்ளன, தடுப்பு முகாம்கள் எங்கே உள்ளன, ஒவ்வொரு தடுப்பு முகாமிலும் எத்தனை பேர் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் போன்ற வினாக்களுக்கு அரசு விடையளிக்க மறுக்கின்றது.

காணாமற் போதல்கள், கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மலிந்த சிறிலங்காவின் விடை அளிக்க மறுக்கும் நிலைப்பாடு பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன

தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பான முரண்பட்ட தகவல்களை அரசுத் தலைவர்கள் காலத்திற்குக் காலம் வெளியிடுகின்றனர் இது விமர்சனங்களைச் சமாளிக்கும் நோக்கில் வெளியிடப்படுகின்றன

மிக அண்மையில் பிரதமர் டி.எம் ஜெயரத்தின 11,700 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரண் அடைந்துள்ளனர் அல்லது அரசு படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்

இந்த 11,700 பேரில் 2,400 பேர் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். புனர்வாழ்வு பயிற்சி என்றால் என்ன வென்று கூற அவர் மறுத்து விட்டார்.

பிரதமர்; ஜெயரத்தின அறிவித்த தகவலின் படி 1,350 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது அரசு வழக்குத் தொடர இருப்பதாக அறியப்படுகிறது. பிரதமரின் உரைக்கு முன்னராக அரசின் மூத்த அதிகாரி டாக்டர் பாலித கோகன 12,700 விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்

இடம் பெயர்ந் தோரையும் சந்தேக நபர்களையும் தடுப்பு முகாம்களில் முடக்கி வைத்திருப்பதற்குச் சர்வதேச சட்டம் இடமளிக்கவில்லை இப்படியான தடுத்தல்கள் சட்டத்திற்கு முரணான செயல்களாகும்.

சிறிலங்காவின் தடுப்பு முகாம்கள் பற்றிய உலகின் கரிசனை இந்த மாதம் (யூலை 2010) நடந்த ஒரு முன்னாள் போராளியின் சடுதி மரணத்தால் தோன்றியுள்ளது.

வெலிக்கந்தை தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஊசி மூலம் நோய்த் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது ஒவ்வொருவருக்கும் இரண்டு ஊசிகள் போடப்பட்டன ஊசி போடப்பட்டவர்கள் உடனடியாகச் உடற் சோர்வு அடைந்துள்ளனர் ஊசி மருந்து ஏற்றப்பட்ட சிவம் என்ற முன்னாள் போராளி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்

ஊசி போடுவதற்காக வரிசையாக நிறுத்தப்பட்ட போராளிகள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால் ஊசி போடும் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட்டது உயிரிழந்த சிவத்தின் உடல் அவருடைய சொந்த ஊரான யாழ் குடா நாட்டின் பளைக்கு அனுப்பப்பட்டு அவருடைய இறுதி கிரிகைகள் நடந்து முடிந்து விட்டன சிவம் ஒரு பிள்ளையின் தந்தையாவார்

இந்த விவகாரம் அத்தோடு முடிந்து விடவில்லை வெலிக்கந்தை போராளிகளுக்கு ஏற்றப்பட்;ட மருந்து என்னவாக இருக்கும் என்ற சர்ச்சை இன்னும் முடியவில்லை. சிறிலங்காவின் வதை முகாம்களில் நரம்பு மற்றும் உடற் தசையை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்யும் நச்சு ஊசிகள் போடப்படுகின்றன இது ஊசி செலுத்தப்பட்டவர்களை நடைப் பிணமாக ஆக்கிறது இவர்கள் குடும்ப வாழ்வுக்கு உதவாதவர்களாகவும் சுற்றத்தாருக்கு பெரும் சுமையாகவும் இருக்கின்றனர்

உண்மையை வரவழைக்கும் ஊசி என்று அழைக்கப்படும் மூளையைப் பாதிக்கும் ஊசியும் சிறிலங்காவின் சித்திரவகைகளில் பயன்படுத்தப்படுகிறது இந்த ஊசி மூளைப் பகுதியைப் பாதிக்கின்றது புலனாய்வாளர்களால் கேட்கப்படும் வினாக்களுக்குச் சாதகமான பதில் கூறுவதற்க்கு இந்த நச்சு ஊசி தூண்டுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பின்னனியில் வெலிக்கந்தையில் போடப்பட்ட ஊசி பற்றிய விவரங்களை அறிய உலக சமுதாயம் ஆவலாக உள்ளது. இறந்த போராளியின் பிரேத பரிசோதனை அறிக்கையை அரசு வெளியிடாமல் இழுத்தடிப்புச் செய்வதின் நோக்கம் என்ன? அப்படியான அறிக்கை வெளிவந்தாலும் அதன் நம்பகத் தன்மை பூச்சியமாகத் தான் இருக்கும்.

தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தழிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களின் அவல நிலையை பற்றிச் சர்வதேச மனித உரிமைக் காப்பகம் தனது 02 பெப்ரவரி 2010 அறிக்கையை சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்களின் நிட்சயமற்ற தலைவிதி என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளது.

எந்தச் சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பும் இந்தக் காப்பகம் இவர்கள் ஜ.சி.ஆர்.சி போன்ற அமைப்பைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கின்றனர் என்று சுட்டிக் காட்டுகின்றது தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான உண்மைத் தகவல்களை அறிய முடியவில்லை என்றும் அது கவலை தெரிவித்துள்ளது

தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்குச் சட்ட ஆலோசனை பெறும் உரிமை வழங்கப்படவில்லை என்று மனித உரிமை காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் குவக்தனாமோ தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு கூட இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

கடும் போராட்டங்களுக்கு பின்பு அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளைச் சென்று பார்ப்பதற்கு பெற்றாருக்கும் உற்றாருக்கும் அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.

இவர்களை இராணுவத்தினரே தடுப்பு முகாம்களுக்கு அழைத்து செல்கிறார்கள். பார்வையிடும் நாட்கள் சனி, ஞாயிறு என்று விதிக்கப்படுகிறது பார்வையாளர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப் படுவதில்லை இராணுவத்தின் மேற்பார்வையில் சந்திப்புக்கள் நடைபெறுகின்றன தடுத்து வைக்கப் பட்டோருக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளும் உணவுப் பொட்டலங்களும் கடுமையாகப் பரிசோதிக்கப் படுகின்றன.

வெலிக்கந்தை என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அதைச் சுற்றியுள்ள திருகோணமடு, கந்தக்காடு. சேருவிலை என்பனவற்றின் காட்டுப் பகுதிகளில் கூடுதலான தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன காடுகளை வெட்டித் துப்பரவு செய்யும் பணி போராளிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. போராளிகள் கூடாரங்களில் வாழ்கிறார்கள். இராணுவத்தினரின் கூடாரங்களை அமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளையும் போராளிகள் செய்கிறார்கள் இவர்கள் இலவச வேலையாட்களாகப் படையினரால் நடத்தப்படுகிறார்கள்.

போராளிகளுக்கு மூன்று நேரமும் சோறு தான் உணவாக வழங்கப்படுகிறது சோற்றுக்கான கறி படுமோசமாக இருக்கிறது மனித உணவுக்கு உதவாத பழுது பட்ட அரிசி சமையலுக்குப் பயன்படுத்தப் படுகின்றது. சோற்றில் கல் இருந்தால் பொறுக்கி எறியாலம் கல்லில் சோறு இருந்தால் அதை என்ன செய்யலாம் என்று சொல்ல வைக்கும் கல், மண், புலுக்கள், நிறைந்த உணவு வெலிக்கந்தை முகாம்களில் வழங்கப்படுகிறது எங்கு பார்த்தாலும் இலையான்களும் கொசுக்களும் காணப்படுகின்றன

இராணுவப் பாதுகாப்போடு கந்தக்காடு முகாம்களில் இருந்து ஜந்து கி.மீ தொலைவில் உள்ள மாவிலாறுக்குப் போராளிகள் கூட்டிச் செல்லப்படுகிறார்கள் இந்த நீர் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் உதவுகிறது. மஞ்சள் நிறமான இந்த நீரைக் குடிப்பதால் வயிற்றோட்டம், சிறுநீர்க் கோளாறு போன்ற வற்றால் பலர் அவதிப்படுகின்றனர்

நீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்படவில்லை. கடும் நோயாளிகள் மாத்திரம் வைத்தியசாலைக்குச் கூட்டிச் செல்லப்படுகிறார்கள் பாரிய கற்பாறைகளை கைக்கருவி மூலம் உடைத்துச் சிறு கற்களாக நொருக்கும் பணிக்கு அமர்த்தப்பட்ட போராளிகள் அடிக் அடி சுகயீனம் அடைகின்றனர் கிணறு வெட்டும் பணிக்கும் போராளிகள் அமர்த்தப்படுகின்றனர் வெளிப்படையாகச் சொல்ல முடியாத கொடூரங்களை மென்மையான வார்த்தைகளால் அழைக்கும் பாரம்பரியம் சிறிலங்காவில் உண்டு தடுப்பு முகாம்களை நலன்புரி நிலையங்கள் என்றும் புனர்வாழ்வு மையங்கள் என்றும் அரச தரப்பினர் அழைப்பார்கள் உண்மை தான் வேறு மாதிரியாக இருக்கின்றது இதற்கு வெலிக்கந்தை சான்று பகருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.