மக்களின் பாதுகாப்பே முக்கிய தேவை கவலைகளோ கண்டனங்களோ அல்ல

5வன்னியில் மிகச் சிறிய பகுதிக்குள் வாழுகின்ற மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பும், உயிர்வாழ்வும் கேள்விக்குள்ளான நிலையே நீடிக்கிறது.

இன்னமும் புலிகளிடம் இருப்பதாகச் சொல்லப்படும் 45 சதுர கி.மீ பரப்பளவான பிரதேசத்துக்குள் வாழுகின்ற இந்த மக்களின் சார்பில் உலகெங்கும் தமிழ் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் சர்வதேச ரீதியில் இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. போரை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் எதுவும் முன்வராத போக்கு, தமிழ்மக்களைப் பெரிதும் வெறுப்படையச் செய்திருக்கிறது.

பாதுகாப்பு வலயம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று குவிந்திருக்கின்ற நிலையில் அங்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் ஏற்பட்டிருக்கின்ற தட்டுப்பாடு, பற்றாக்குறைகள் மக்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன. ஒருபுறத்தில் நாளாந்தம் பீரங்கித் தாக்குதல்களில் மக்கள் கொல்லப்பட்டு வருகின்ற மோசமான நிலை. மறுபுறம் நாளொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் ஒரு குடம் தண்ணீருக்காக நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய பரிதாபம். இன்னொரு புறம், ஐ.நா உணவுத்திட்டத்தின் குறைந்தளவிலான உணவுப்பொருட்களுக்காகக் கொதிக்கும் வெயி லில் வரிசையில் நிற்கும் அவலம். இப்படியே அங்குள்ள மக்கள், பீரங்கித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பதுங்குகுழிகளுக்குள் இருப்பதா நிவாரணப் பொருட் களை வாங்குவதற்காக வரிசையில் நிற்பதா என்று தெரியாமல் விழி பிதுங்கிப் போயிருக்கின்ற சூழல். அங்கு சாதாரணமாக, நாளொன்றுக்கு இரண்டு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா உணவுச் செலவுக்குத் தேவைப்படுவதாகவும் தேங்காய் ஒன்று 110 ரூபாவுக்கும் மேல் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உழைப்பு, வருமானத்துக்கு வழியற்ற நிலையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிர்வாகங்கள் முடங்கிப் போயிருக்கின்ற நிலையில் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவை, அதுவும் இருவர் கொண்ட குடும்பம் எவ்வாறு சம்பாதித்துக் கொள்ள முடியும்? அதைவிடப் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட கடற்கரை சார்ந்த பிரதேசத்தில் குடிநீர் வாய்ப்புகள் குறைவு. அது பொட்டல் வெளியும், மரங்கள் இல்லாத பாலைவனம் போன்ற நில அமைப்பையும் கொண்ட பிரதேசம். இதற்குள் இலட்சக்கணக்கான மக்கள் அடர்த்தியாக வாழுகின்ற அவலம் நிகழ்கிறது. இதன் காரணமாக தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது.

பசியின் கொடுமையால் அடம்பன் கொடியின் இலைகளை வறுத்துச் சாப்பிட்ட ஒரு குடும்பமே நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. 1990களின் கடைசியில் ஜெயசிக்குறு காலத்தில் தாமரைக் கிழங்கு சாப்பிட்ட சில சிறுவர்கள் வன்னியில் மரணமானதும் குறிப்பிடத்தக்கது. அதைவிட கரையோரம் சார்ந்த பகுதியில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருப்பதால் மக்களின் பாதுகாப்பு இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் சுனாமிக்குப் பின்னர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது நினைவிருக்கலாம். கரையோரத்தில இருந்து 100 மீற்றர் பகுதிக்குள் வீடுகளை அமைக்கக் கூடாதென்பதே அது.

ஆனால் கரையோரத்தில் குடியிருப்புகளை அமைக்க அரசாங்கமே வன்னிப்பகுதி மக்களை நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த நிலையில் இன்னொரு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் அது அங்குள்ள மக்களை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. கடந்தவாரம் மாத்தளன் கரையோரப் பகுதியில் விளையாடிய மூன்று சிறுவர்கள் கடல் அலையில் அகப்பட்டு மரணமாகியிருக்கிறார்கள். இதுபோன்ற அவலங்களையும் அங்குள்ள மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது பற்றிய தகவல்கள் வெளியே தெரிவது மிக மிகக் குறைவு.

வன்னியில் சிறிய பிரதேசத்துக்குள் முடங் கிப் போயிருக்கின்ற மக்களின் பாதுகாப்பு பற்றி எவரும் சிந்திப்பதாகவில்லை. விடுதலைப் புலிகள் அங்குள்ள மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்று சொல்லிச் சொல்லியே அங்குள்ள மக்கள் நாளாந்தம் பல்வேறு வழிகளிலும் கொல்லப்படுகின்றனர்.

இதற்கு எதிராக உலக நாடுகள் என்ன செய்திருக்கின்றன. ஐ.நா.வும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவும் வெளியுலக நாடுகளும் அவ்வப்போது கண்டனங்களைத் தெரிவிக்கின்றன. கவலை வெளியிடுகின்றன. ஆனால், அதற்கு அப்பால் எதுவுமே நடப்பதில்லை. வன்னிக்குள் வாழும் மக்களைப் பற்றி தமது கவலைகளையும், கண்டனங்களையும் தெரிவிப்பதை விட, இந்தத் தரப்புகள் வேறெதையும் செய்வதில்லை. இந்தக் கவலைகளோ கண்டனங்களோ வன்னிலுள்ள மக்களை காப்பாற்ற, அவர்களுக்கு ஒருவேளை உணவைக் கொடுக்க வக்கற்றவை. இதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது.

இந்த விடயத்தை சர்வதேசம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது கண்டனம் தெரிவிப்பதற்கான நேரம் அல்ல. கவலைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான தருணமும் அல்ல. பழிவாங்கும் பழிதீர்க்கும் நேரமும் அல்ல. ஆனால், அதையே தான் இப்போது எல்லா நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் செய்கின்றன. வன்னியில் உள்ள மக்களை படைப்பலத்தைக் கொண்டு வெளியேற்றுவதற்கு இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் முயற்சி செய்வதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இது சாத்தியமா என்பது ஒருபுறத்தில் இருக்க வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதன் மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து சர்வதேச சமூகம் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்ததா? வெளியேற்றப்படும் மக்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது என்ற கேள்வி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் வன்னிக்குள் வாழும் மக்களை பலவந்தமாக கொண்டு வந்து, அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இறக்குவதன் மூலம், சர்வதேசத்தின் பிரச்சினை வேண்டுமானால் தீர்ந்து விடலாம்.

ஆனால், அங்கு வாழும் மக்களின் பிரச்சினைக்கு முடிவு கிட்டுமா? ஒரு புறத்தில் பாதுகாப்பு பிரச்சினை. இன்னொரு புறத்தில் நீண்ட அகதிவாழ்வு என்ற அவர்களின் பிரச்சினை தீராமல் தொடரத்தான் போகிறது. எனவே வன்னியில் போருக்குள் வாழும் மக்களை படை நடவடிக்கையின் மூலமோ அல்லது வேறு வழிகளிலோ அங்கிருந்து அள் ளிக் கொண்டு வருவது அந்த மக்களின் பிரச்சினைக்கு முடிவைத் தராது.

மாறாக அதுவே புதிய பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடும். இப்போதைய சூழலில் அங்குள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டுமானால் இருக்கின்ற ஒரே வழி போரை நிறுத்துவதõகவே இருக்கும். ஆனால் அரசாங்கமோ அதற்கு சிறிதும் இணங்குவதாகத் தெரியவில்லை. எந்த நாடு போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை கூறினாலும் அதை ஏற்கின்ற நிலையிலும் இலங்கை அரசாங்கம் இல்லை. இந்த நிலையில் ஒதுங்கிக் கொள்வதற்கு வசதியாக வெளிநாடுகள் இலங்கையின் இறைமை, தன்னாட்சி உரிமை போன்றவற்றை சாட்சிக்கு இழுத்து வருகின்றன. இவையெல்லாம் மக்களைக் காப்பாற்றுகின்ற பொறுப்பில் இருந்து விலகி நிற்பதற்காக கூறப்படுகின்ற சாட்டுகளே. தமிழ்மக்களின் நலன் மீது அக்கறை இருந்தால் மாற்று வழிகளைப் பற்றி ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கும்.

சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் இலங்கையின் மனிதஉரிமை நிலைகள் பற்றி அறிக்கையிடுவதிலும், தரவுகளைச் சேகரிப்ப தில் காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் அங்குள்ள மக்களைப் பாதுகாப்பதில் காட்ட வேண்டும். அதுவே பிரதானமானது. இப்போதைய நிலையில் அங்குள்ள மக்களுக்கு தேவையானது பாதுகாப்பும் அத்தியாவசிய உணவுப்பொருட்களுமே தவிர, கண்டன அறிக்கைளோ கவலைகளோ அல்ல.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.