லண்டனில் நடைபெற்ற இரவுநேர கவனயீர்ப்பு பேரணியும் – சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைபயண ஆரம்பமும்.

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் இரத்த நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்றைய தினம் இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடாத்டப்பட்டது.

23-07-2010 வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணி 10:45 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் செயலகத்திற்கு முன்பாக சென்று நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தமையானது தமிழர்களின் போராட்டம் விடுதலை பெறும் வரை ஓய்வின்றி தொடரும் என்பதை வெளிப்படுத்துவதாகவும், தொடர்ச்சியான அவலங்களை சந்தித்த மக்களின் மனக்கொதிப்பினை வெளிக்கொண்டுவருவதாகவும் அமைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்தப்பேரணியில் கலந்துகொண்டிருந்த திரு.சிவந்தன் (கோபி) அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி லண்டனில் இருந்து ஜெனீவா வரையான தனது ஐ.நா நோக்கிய மனிதநேய நடைப்பயணத்தை ஆரம்பித்தார்.

இந்த இரவுநேர கவனயீர்ப்புப் பேரணியிலும், திரு.சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்விலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டிருந்ததோடு திரு.சிவந்தனின் நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்தினர்.

இந்த நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவையை சேர்ந்த பல உறுப்பினர்களும், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் அதிகளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திரு. சிவந்தனின் நடைபயணம் ஆரம்பிப்பதற்கு முன் அங்கு கூடியிருந்த 2000 க்கும் அதிகமான மக்கள் மத்தியில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில்———, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியான திரு. தயாபரன், பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி திரு. ஜெயா, அக்ற் நவ் அமைப்பின் பிரதிநிதியான திரு.ரிம் மார்ட்டின், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி திரு. ஜெயானந்தமூர்த்தி, மற்றும் திரு.சிவந்தன் ஆகியோர் உரையாற்றினர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.