சர்வகட்சி குழுவின் ஆலோசனையை ஏற்று தமிழரின் தேசியப் பிரச்சனையை தீர்க்க முடியுமா?

உலகையும் குறிப்பாக இந்தியாவையும் தமிழரையும் ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்டது தான் சர்வகட்சி குழு. இந்த குழுவின் தலைவராக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவினால் நியமிக்கப்பட்டவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. இவர் மகிந்தா அரசில் அமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்த சர்வகட்சிக் குழுவில் பல கட்சிகள் இடம்பெற்று இருந்தாலும் இறுதியில் 13 கட்சிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு ஆலோசனையை அரசிடம் வழங்கியிருந்தது. இந்த இறுதியறிக்கை மூலமாக சிறிலங்காவின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டுவருமோ என்னவோ ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வை வழங்குமா என்பதை தீர்க்கமாக ஆராய்வதின் மூலமாக பதிலை எதிர்பார்க்கலாம்.

மகிந்தாவினால் ஜூலை 11, 2006 அன்று சர்வகட்சி மாநாட்டை நடாத்தி இந்தக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்கள். ஆகஸ்ட் 13, 2007 அன்று மகிந்தா அதிகார பூர்வமாக இந்த குழுவை ஆரம்பித்து வைத்தார். சர்வகட்சி ஆலோசனைக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி அங்கம் வகித்தபோதிலும் ஆலோசனை குழுவிலிருந்து இடைநடுவிலேயே விலகிக்கொண்டது. இந்த குழுவிற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் இரண்டு நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது. இந்த சர்வகட்சி குழு 128 தடவைகள் கூடி ஜூன் 30, 2009 அன்று இந்த இறுதியறிக்கையை மகிந்தாவிடம் கையளித்தது.

வன்னிப் போர் முடிந்து ஒரு வருடமாகியும்இ இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டு 13 மாதங்கள் ஆகியும் இந்த அறிக்கையினை வெளியிடாமல் மௌனம் காத்துக்கொண்டிருந்தது மகிந்த அரசு. திடீர் திருப்பமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தாவி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த எம்.பி. ஆர். யோகராஜன் அவர்கள் இந்த அறிக்கையினை ஊடகவாயிலாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றார். இதனைப் பகிரங்கப்படுத்துவதற்காக செய்தியாளர் மாநாடு ஒன்று இந்த வார ஆரம்பத்தில் கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தச் செய்தியாளர் மாநாட்டில் சர்வகட்சிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களான ஆர். யோகராஜன் எம்.பி., முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை அறிக்கை அளிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் மௌனம் காத்திருந்த மகிந்த தலைமையிலான அரசுஇ ஏதோ தமிழரின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கும்படியான அரசியல் தீர்வொன்றை வைத்திருப்பதாக உலகநாடுகளிடம் தான் விஜயம் செய்யும் போதெல்லாம் கூறிவருகின்றார் மகிந்தா என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் புதுடெல்லியிடமும் அடிக்கடி இந்த தீர்வை வைத்துக்கொண்டு தான் ஏதோ உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தீர்வொன்றை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிக்கையினை பகிரங்கப்படுத்தியிருப்பதனால் மகிந்தா வைத்திருக்கும் தீர்வென்ன என்பதனை அறியக்கூடியதாகவுள்ளது.

சர்வகட்சிக் குழுவின் ஆலோசனை தான் என்ன?
தமிழர்கள் கைகளை தலையில் வைத்து அதிரும்படியான ஒரு ஆலோசனையை சமர்ப்பித்துள்ளது இந்த சர்வகட்சி குழு. தமிழர்களின் தேசியப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மாறாக எந்த தீர்வையும் முன்வைக்காமல் வெறுமனே சிறிலங்காவின் தேசியப் பிரச்சனையை மட்டும் தீர்ப்பாற்போல் தீர்வை முன்வைத்துள்ளது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோட்பாட்டுடன் களம் இறங்கிய விடுதலைப் போராளிகளுக்கும் அவர்களின் பல தசாப்த போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற தோரணையிலேயே இந்த குழுவின் அறிக்கை அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

விடுதலைப்புலிகள் தமிழீழமே ஒரே தீர்வென்று பல காலமாக ஆயுதவழியாக போராடினார்கள். தமிழரின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் தாகம் அணையாமல் தமிழர் மனங்களில் இருந்து கொண்டேயிருக்கும். இப்படியாக தமிழரின் எதிர்பார்ப்பு இருக்கையில் சர்வகட்சிக் குழுவினால் வழங்;கப்பட்டிருக்கும் தீர்வு தமிழருக்கு எந்த விமோசனத்தையும் கொண்டுவரப் போவதில்லை. இரு இனங்களுக்கு இடையில் குறிப்பாக இரு வௌ;வேறு மொழி, பண்பாடு, வரலாறு, சமயம், வாழ்வியல் மற்றும் பூர்வீக பிரதேசங்களைக் கொண்ட மக்களின் பிரச்சனையை ஆகக் குறைந்தது அதிகாரப்பரவலாக்கல் மூலமாக ஒரு அரசியல் தீர்வை காண முடியும்.

ஏற்கனவே சிறிலங்காவில் இருக்கும் மாகாணசபை ஊடாக தமிழருக்கு நடப்பில் இருக்கும் சட்டயாப்பை மாற்றி தமிழருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கி தேசியப் பிரச்சனையை தீர்க்க மகிந்தா முன்வந்தாலும் தமிழ் தலைமை அதனை ஏற்குமா என்றொரு சந்தேகம் இருந்த வேளையில் ஒரு அணு குண்டையே தூக்கிப்போட்டு விட்டது இந்த சர்வகட்சிக் குழு. இக்குழு கையளித்திருந்த இந்த தீர்வுப் பொதியைத் தான் தனது நாட்டிலேயே தயாரித்து வைத்திருக்கும் தீர்வுப் பொதி என்று தம்பட்டம் அடித்து வந்தார் மகிந்தா. இவரின் உண்மைத் திரை இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது.

சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கையின் அம்சங்கள் பின்வருமாறு:
அரசின் தன்மை:
இலங்கைக் குடியரசானது ஒற்றையாட்சி அரசாகும் என்பதால் உணரப்படுவது யாதெனில் எங்கே அரச அதிகாரமானது மாகாணங்களுக்கிடையே பகிரப்பட்டிருக்க அரச கட்டமைப்பானது பிரிபடாததும் ஒன்றிணைக்கப்பட்டதுமான கட்டமைப்பாக கருதப்படல் வேண்டும்.

அரசாங்கத்தின் வடிவம்-முறைமை:
இலங்கை, மத்திய மட்டத்தில் பாராளுமன்ற முறைமை கொண்ட அரசாங்கத்தைக் கொண்டிருக்கும்.

புத்த மதத்தின் அந்தஸ்து:
இலங்கை குடியரசு புத்த மதத்திற்கு அதி உன்னதமான இடத்தை வழங்கல் வேண்டும். அத்தோடு அதன் பிரகாரம் அரசாங்கத்தின் கடப்பாடானது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 10, 14 (1) (உ) ஆல் அனைத்து மத உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிரகாரம் புத்த சாசனத்தை பாதுகாத்தலோடு பேணிப் போற்றலும் வேண்டும்.

அரச கரும மொழியும் தேசிய மொழியும்:
தேசிய மொழியான தமிழும் சிங்களமும் இலங்கையின் அரச கரும மொழியாகவும் இருக்கும்.

ஆங்கில மொழியின் பிரயோகம்:
ஆங்கிலமானது உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.

அரசியலமைப்பின் மீயுயர் தன்மை-இறையாண்மை:
அரசியலமைப்பின் இறையாண்மையானது தற்போது காணப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்புக்குட்பட்டதும் ஆனால், உயர் நீதிமன்றத்திலிருந்து வேறானதுமான ஓர் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் பாதுகாக்கப்படுவதுடன் அங்கீகரிக்கவும் படல் வேண்டும். அரசியலமைப்போடு முரண்படுகின்ற செயல் மற்றும் செய்யாமை தொடர்பான மத்திய மற்றும் மாகாணங்களின் அனைத்துச் செயற்பாடுகளும் வெறாதானதாகும்.

(மத) பேதமைகளுக்கு-பிரிவினைகளுக்கு எதிரான பாதுகாப்பு:
அரசினது ஒற்றுமை, இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும் (மத) பேதமை, பிரிவினைப் பாங்கான போக்கை நலிவடையச் செய்வதற்குமான ஆழமான பொறிமுறைகளை கொண்டிருக்க வேண்டும். மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் குடியரசினுடைய தேசிய ஒற்றுமையையும் பிரிபடாத்தன்மையையும் பாதுகாப்பதற்கு சட்ட ரீதியாக கட்டளைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

தேர்தல் முறைமை:
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவானது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை காணப்படத்தக்கதாக, தேர்தல் தொகுதி அடிப்படையிலான தொகுதிவாரி முறைமையையும் கட்சி அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்டதான இரண்டு வாக்குச் சீட்டுகளுடனான ஒரு கலப்புத் தேர்தல் முறைமையை ஏற்றுக் கொள்கிறது.

அதிகாரப் பகிர்வு:
மக்களின் அதிகாரமானது அரசாங்கத்தின் மூன்று மட்டங்களிடையே பகிரப்பட்டிருக்கும். குறிப்பாக மத்திய அரசாங்கம், மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்கங்களிடம் ஒவ்வொரு மட்டமும் வேறான அதிகாரப் பட்டியல்களை அரசியலமைப்பின் ஊடாக கொண்டிருக்கும்.

ஆட்சிப் பேரவை (செனட்):
தேசிய சட்டவாக்கத்தில் பொறுப்பு வகிக்கக் கூடியதான மாகாணங்களைக் கொண்டு ஆட்சிப் பேரவை ஒன்று அமைக்கப்படும். மாகாணங்களிடையே எதிரிடையான விளைவுகளைக் கொண்ட கவனயீனப் போக்கான சட்டங்களுக்கு எதிரான ஆழமான ஒரு பொறி முறையாக இது தொழிற்படும். இது முன்மொழிவது யாதெனில், ஒவ்வொரு மாகாணமும் 63 மொத்த உறுப்பினர்கள் அமைவான, அந்தந்த மாகாண சட்டவாக்கத்தின் உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்கு முறைமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரவையாளர்களால் பிரதிநிதித்துவப்படும். புறம்பாக 10 பேரவையாளர்கள் (வடக்கு, கிழக்குக்கு புறம்பாக வதியும் முஸ்லிம்களுக்கு ஏனைய ஒன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும்) சமூக சபைகளால் தெரிவு செய்யப்படுவார்கள். குடியரசின் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படாத சமூக குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்த இருவரை நியமிப்பார்.

சமூக சபை:
இரண்டு சமூக சபைகள் காணப்படும், ஒன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும், மற்றொன்று வட கிழக்குக்கு புறம்பாக, சமூக அங்கத்தவர்களின் அபிவிருத்தி தேவைகளுக்காக வட கிழக்குக்கு வெளியே அவர்கள் எங்கு வசித்த போதிலும் ஆள்புல நோக்குகைகள் இன்றி செயற்படத்தக்க முஸ்லிம்களுக்குமாக காணப்படும்.

மத்திய மற்றும் மாகாணங்களுக்கிடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல்:
அதிகாரப் பகிர்வானது வெளிப்படையானதாகவும் முற்றிலும் கவர்பாடற்றதாகவும் இருத்தல் வேண்டும். ஒருங்கிய நிரல் இல்லாமலாக்கப்படுவதுடன் மேற்சொன்ன அதிகாரமானது மத்திய நிரல் மற்றும் மாகாண நிரல்களுக்கிடையில் தகுந்த முறையில் பகிர்ந்தளிக்கப்படும். மூன்றாவது நிரலானது உள்ளூர் அதிகார சபைகளின் அதிகாரங்களை வெளிப்படையாகக் கூறும் விதமாக தொகுக்கப்பட்டிருக்கும்.

தேசிய மற்றும் மாகாண உயர் பதவி நியமன சபை:
அரச சேவையினது நீதித் துறையையும் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும் தேசிய பதவி நியமன சபை காணப்படும். இந்த தேசிய சபையானது பிரதமர், சபாநாயகர், பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். இதில் மூன்று பேர் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக குறித்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனையுடன் நியமனம் செய்யப்படுவர்.

ஒரு மாகாண உயர் பதவி நியமன சபையானது முதலமைச்சர், சபைத் தவிசாளர் எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினால் பிரேரிக்கப்படுகின்ற ஆளுனரால் நியமனம் செய்யப்படுகின்ற வேறுபட்ட ஆறு பேரைக் கொண்டதாக இருக்கும். மாகாண சபை கூட்டமைவானது இயன்ற வரை மாகாணங்களின் இனங்களின் சேர்மத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்.

சீர்திருத்த நடபடிமுறைகள்:
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 82 (5) மற்றும் 83 ஆகியன நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அல்லது வேறு அரசியலமைப்பை கொண்டு பிரதியீடு செய்வதற்கான சட்ட மூலமானது பாராளுமன்றத்தினது இரண்டு சபைகளினதும் 2-3 பெரும்பான்மையான உறுப்பினர்களினது வௌ;வேறான அமர்வு மற்றும் வாக்களிப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

உப்புச் சப்பு இல்லாத பொதி
தமிழர்கள் அரசியலில் கற்றுக்குட்டிகள் என்ற நினைப்புடன் வலம் வரும் மகிந்த அரசு ஒரு நாள் மண்ணை கவ்வும் என்பது மட்டும் உண்மை. பல தசாப்த அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான போராட்டங்களின் பின்னர் இப்பொழுது தமிழர்கள் சொல்லால் வர்ணிக்கமுடியாத பேரவலத்தை சந்தித்து இருக்கும் வேளையில் அவர்களை கூண்டுக்குள் வைத்துக்கொண்டு தான் நினைத்ததை எதையும் செய்து முடித்து விடலாமென்ற மமதையில் இருக்கும் மகிந்தாவிற்கு யார் என்ன புத்திமதி சொன்னாலும் கேட்கமாட்டார். அதற்காகவே தனது அரசில் அங்கம் வகிக்கும் ஒருவரை இந்த குழுவிற்கு தலைவராக அமர்த்தி தான் சொல்வதை இவர் மூலமாக தெரிவிக்கலாமென்ற கைங்கரியத்தில் இருக்கின்றார் மகிந்தா.

ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தொகுதிவாரி முறைமையையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாகாண, உள்ளுராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியம் என்று சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட செனட்சபை, இந்திய வம்சாவளி மக்களுக்கு சமூக சபை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய, மாகாண உயர்பதவி நியமன சபை அமைக்கப்படுதல் போன்ற யோசனைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒற்றை ஆட்சிக்குள் அரசியல் தீர்வை காண்பது என்பது நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. காரணம் இரு இனங்களும் பல தசாப்தங்களாக பல முரண்பாடுகளை அனுபவித்தது. மேலும் தமிழீழத்திற்கு மாற்றுத் தீர்வு குறைந்தது தமிழருக்கு சம உரிமையை அளித்து அவர்கள் சமத்துவத்துடன் வாழ வழி காணுவதே ஒரே தீர்வாக இருக்க முடியும்.

அரசின் தன்மை குறைந்தது சமட்சி ஆட்சிமுறையை கொண்டதாக மாநிலங்களுக்கு குறிப்பாக ஒன்றிணைந்த தமிழரின் வட-கிழக்கு மாநிலத்திற்கு (தமிழீழம்) அவர்களை தாமே ஆளும் அளவு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதன் மூலமாகத் தான் சிறிலங்கா மற்றும் தமிழரின் தேசியப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமென்பதே நடைமுறைச் சாத்தியமாக இருக்க முடியும். இல்லாவிட்டால் ஒரு பிரபாகரன் அல்ல பல ஆயிரம் பிரபாகரன்கள் நாளை தமிழீழமே தமிழரின் தீர்வு என்று கூறி களம் காண்பார்கள் என்பது தான் உண்மை.

இரு தனித்துவமுள்ள தேசங்கள் சிலோன் என்ற தீவில் இருப்பதனால் இரு பாராளுமன்றங்களை அமைக்கலாம். சிறிலங்காவின் பாராளுமன்றத்தை மத்திய மட்டத்திலும் தமிழீழத்தின் பாராளுமன்றத்தை திருகோணமலையிலும் அமைக்கலாம். இவைகள் பாராளுமன்ற முறைமை கொண்ட அரசாங்கங்களைக் கொண்டிருக்கும். முழுத்தீவுக்கும் ஒரே ஒரு மேல் சபை மட்டும் இருக்க வேண்டும். ஐந்து வருடங்கள் சிங்களவரினால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் முதல் குடிமகனாக இருக்க முடியும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு தமிழர்களினால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் முதல் குடிமகனாக இருக்க முடியும். இதுவே யதார்த்தமான தீர்வாக அமையும். அனைத்து மதங்களும் சமம் என்ற வகையில் சட்டயாப்பில் குறிப்பிடப்பட வேண்டும். புத்த நாடு என்ற வார்த்தையை அடியோடு சட்டயாப்பில் இருந்து அகற்ற வேண்டும்.
இரு சமுதாயங்களுக்குள் புரையோடிப்போயிருக்கும் கசப்புத் தன்மைகள் இல்லாதொழிக்க வேண்டுமாயின் இரு தரப்பினரின் விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கி செயல்படுவதன் மூலமே தீர்வைக் கொண்டு வரமுடியும். அதைவிடுத்து வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறுவதுபோல் இந்த சர்வகட்சிக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் தீர்வைத் திணிப்பதன் மூலமாக சிறிலங்காவின் தேசிய பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டுவரலாம் ஆனால் ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. யதார்த்தத்தை உணராமல் 1940 மற்றும் 1950-களில் விட்ட தவறையே மீண்டும் சிங்கள தேசம் தமிழர் மீது செய்ய முனைகின்றது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கற்ற பாடங்களையும் மறந்து பழைய தலைமுறை விட்ட பிழையையே 21-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து மென்மேலும் நாட்டைக் குட்டிச்சுவராக்க முனைகின்றார்கள் சிங்களத் தலைமைகள். இனி கடவுளால் தான் தமிழரைக் காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டு மாண்ட தந்தை செல்வாவின் வாக்கு இன்றைய காலகட்டத்திற்கு நன்றாகவே பொருந்தும். சிங்களத் தலைமைகளின் யதார்த்தமறியாத இப்போக்கு தொடருமேயானால் கடவுளால் கூட சிறிலங்காவை அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்ற முடியாது.

அனலை நிதிஸ் ச. குமாரன்

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.