சிவந்தனின் ஐ.நா. நோக்கிய மனிதநேய நடைப்பயணத்திற்கு எம் வாழ்த்துக்கள் – டென்மார்க் இளையோர் அமைப்பு

டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம்:

ஈழம் ஆண்ட பரம்பரை வீழ்தல் கண்டு பொங்கியெழுந்தார் எம் தலைவர் வே. பிரபாகரன். அவர் காட்டிய வழி நின்று மூன்று தசாப்தத்திற்கும் மேலாக கண்ணை இமை காப்பதுபோல் ஈழமண்ணையும் மக்களையும் காத்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழன் வீரம் உலகின் கண்களை உறுத்த, 20ற்கும் மேலான சர்வதேச நாடுகளின் ஆதரவோடு போர் நெறிமுறைகளிற்கு மாறாகவும் தமிழினத்தின் மீது உலகம் பார்த்திராத இனவழிப்புப் போரை 2009ல் நடாத்தியது சிங்கள காட்டுமிராண்டி அரசு.

இதில் 40000 ற்கும் அதிகமான மக்கள் உயிர் பறிக்கப்பட்டதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊனமாக்கப்பட்டதும், 300000 ற்கும் அதிகமான எம் மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டதும், உயிரோடு போராடிக்கொண்டிருந்த மக்களையும் போராளிகளையும் காக்கும் நோக்கோடு வெள்ளைக்கொடியேந்திச் சென்ற விடுதலைப்புலிகள் முன்னாள் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா. நடேசனும் முன்னாள் சமாதானப்பணியகச் செயலாளர் புலித்தேவனும் படுகொலை செய்யப்பட்டதும், பல பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதும் இன்னும் பல கொடுமைகள் தமிழ் இனத்திற்கு நிகழ்ந்து கொண்டிருப்பதும் எம் நெஞ்சையெல்லாம் உலுகிக்கொண்டே இருக்கின்றன.

இது இவ்விதம் இருக்க மூடி இருந்த உலகின் கண்கள் சற்றே திறப்பதுபோன்ற ஐ.நா சபையின் சில நகர்வுகள் தென்படும் இவ்வேளையில் சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் கடினமான இம் முயற்சி வெற்றிபெற தமிழ்மக்கள் அனைவரும், சிவந்தனுக்கு எமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென டென்மார்க் இளையோர் அமைப்பு வேண்டி நிக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.