சிவந்தன் 5வது நாளாக ஐ.நா நோக்கிய நடை பயணத்தைத் தொடருகின்றார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார். இருப்பினும் அவரது காலில் அவ்வப்பொழுது வலி ஏற்படுவதை அவரது நடையில் இருந்து அவதானிக்க முடிவதாக அங்குள்ள உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர்.

பிரான்சின் கடற்கரையான கலையை கடந்த திங்கட்கிழமை இரவு சென்றடைந்திருந்த அவர், நேற்று காலை முதல் இரவுவரை 51 கிலோமீற்றர்கள் நடந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அவர், இன்று காலை முதல் ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2:00 மணிவரை 21 கிலோமீற்றர்கள் தூரம் நடந்து சென்றுள்ளார்.

சிவந்தன் பரிஸ் நகரைச் சென்றடைய இன்னும் 230 கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

பிரான்ஸ் மக்கள் நேற்று அவரது நடை பயணத்துடன் இணைந்து உற்சாகம் கொடுத்தது போன்று கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர் நடந்து செல்லும் இடத்தைக் கேட்டறிந்து, அவருடன் தொடர்ந்து இணைந்துகொள்ள வேண்டும் என ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

பிரான்ஸ் – 0033 66 49 79 490

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சுவிற்சர்லாந்து ஜெனீவா முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.