நினைவுத் தூபிகளை, உணவகங்களை அமைப்பதன மூலம் தமிழ் மக்களிடமிருந்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினை எதிர்பார்ப்பது சாதாரணமா

கடந்த ஆறு மாத காலத்தினுள் பன்னிரண்டு தடவையாக நான் வன்னி செல்கின்றேன். இக்காலகட்டத்தினுள் ஏ‐9 பாதையின் இருபுறத்திலும் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தின் இருபுறத்திலும் யுத்தத்தில் பலியான படையினரின் நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டுவருவதுடன், இதே பூமியில் சில காலங்களுக்குமுன் இறந்த விடுதலைப் புலி உறுப்பினர்களினதும், பொதுமக்களினதும் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபிகள் இடித்தளிக்கப்பட்டிருந்தன.

ஒட்டிசுட்டானில் அமைக்கப்பட்ட படையினரின் உணவகங்கள் ஏ‐9 பாதையில் பயணிப்போரின் தேவைகளை நிறைவுசெய்வதாக இருந்தது. குளிர்சாதனப் பெட்டிகள், பொருத்தப்பட்டு அமைக்கப்பட்ட உணவகங்களுடன் ஒப்பிடும்போது சாதாரணதரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேநீர்கடைகளில் ஒரு தேநீர் கோப்பையினைக்கூட விற்பனை செய்வதில் இருந்த கஷ்டத்தினை என்னால் காணக்கூடியதாக இருந்தது.

நாட்டின் பெரும்பான்மையானோர் பௌத்தர்களாக இருப்பதனால், விகாரைகளை அமைப்பதற்காக இந்துக் கோவில்களின் சிலைகள் பாதையின் இரு ஓரத்தையும் விட்டு வெகுதொலைவில் போவதை நான் உணர்ந்தேன். நான் சற்றுத் தூரம் பயணித்தபோது மாங்குளம் ‐ முல்லைத்தீவு பாதையில் அலி ஹந்தியினை சந்தித்தேன். சகோதரப் படையினருக்கு இந்த ஊரின் தமிழ் பெயரை வாசிப்பது கஷ்டமாக இருந்தமையினால், அதன் பெயரை ஒரு பலகையில் சிங்கள மொழியில் அலி ஹந்தி என்று எழுதி தொங்கவிட்டிருந்தனர். இதனால் சிரமமின்றி ஊரின் பெயரை வாசித்து விளங்கிக்கொண்டேன்.

அதன்பின் நான் பல தமிழ் பிரதேசங்களுக்குச் சென்றேன். இவற்றின் தமிழ் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டிருந்ததுடன், இவற்றின் பழைய தமிழ் பெயர்கள், பாதையிலிருந்த சமிக்ஞைகள் வழக்காற்றிலிருந்து சிறிதுசிறிதாக அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

2008ற்கு முன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்து தற்போது படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்கள் மற்றும் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் வடக்குப் பிரதேசம் என்பன வன்னி மக்களின் நிஜப்பூமிகளாக இருந்தவையாகும்.

2008ம் ஆண்டின் முற்பகுதியிலேயே இந்த பூமியில் வாழ்ந்த மக்கள் தமது கால்நடைகளுடன் இடம்பெயர்ந்ததுடன் இவர்கள் பல மாதங்களாக மனிக்பாமில் தங்கியிருந்ததுடன் 2009ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அரச உத்தரவுடன் இவர்களில் ஒரு பகுதியினர் தத்தமது பிரதேசங்களில் மிளக்குடியேறினர். ஒரு பகுதியினர் தமது உறவினர்களுடன் நாட்டின் வெள்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இன்னும் சிலர் எங்கென்று குறிப்பிட்டுக் கூறமுடியாத இடங்களில் தமது உறவுகளுடன் வாழ்கின்றனர்.

இது இவ்வாறிருக்க அரசு ஒரு பகுதியினருக்கு தமது சொந்தக் கிராமத்திற்கு செல்வதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த தமது சொத்துக்களை தாங்கள் மீள்குடியேறியபோது இம்மக்களால் தமது கிராமத்தில் காணமுடியவில்லை. யுத்தம் இவர்களது சொத்துக்களை சின்னாபின்னமாக்கியதுடன், இவர்களுள் பலர் 15 தடவைகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இன்று இவ்வாறு இடம்பெயர்ந்து உயிர்வாழும் இவர்கள் அன்று தமது தாய், தந்தை மற்றும் சகோதரர்களின் பிணங்களின் மேல் பாய்ந்து உயிர்தப்பி பிழைத்தவர்களாவர். இவர்கள் மிகவும் ஏழை கஷ்டப்படும் பொதுமக்கள் என்பதுடன் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் குடும்பத்திற்கு ரூபா.15000 என்ற ரீதியில் வழங்கப்பட்ட பணத்தொகையினை பெற்றுக்கொண்டு தமது கிராமத்திற்கு இவர்கள் மீள்குடியேற்ற நோக்கத்துடன் செல்கின்றனர்.

மண்வெட்டிகூட இல்லாத நிலையில் தமது வயல்களில் இவர்கள் அன்றாடத் தொழில்களை ஆரம்பித்ததை என்னால் காணக்கூடியதாக இருந்தது. இலங்கையில் கடலுக்குச் செல்ல அனுமதி இருந்தபோதிலும் படகுகள், வலை போன்ற அடிப்டை வசதிகளற்ற நிலையில் கடலைப் பார்த்தபடி மண்தரையில் உட்கார்ந்திருந்த மீனவர்கள் பலரையும் நான் கண்டேன். இங்கிருந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு 03 படகுகள் மாத்திரமே காணப்பட்டது.

தேவன்பிட்டி கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் பாடம் கற்றுக்கொண்டிருந்த மாணவர் குழாமொன்றினை நான் அவதானித்தேன். இவர்களுக்கு கல்வி கற்பதற்கு பாடசாலை இல்லையென்பதுடன் உட்காருவதற்கு கதிரைகள்கூட இல்லாத நிலையில் தமது உரிமைகளில் ஒன்றான கல்வியினை பெறுவதற்கு இத்தேவாலயத்தில் குழுமியிருந்தனர். பொதுத்தேர்தல் காலத்தில் தமது வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் பாதையோரமாக மூன்று மணித்தியாலத்திற்கும் மேலாக பஸ் வரும்வரை மிக நீண்ட நேரம் காத்திருந்த பலரையும் கண்டதுடன் அவர்களுள் வயோதிபப் பெண் ஒருவரையும் மிகவும் தளர்ந்த நிலையில் கண்டேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் தமது மக்களுக்காக சமய சடங்கொன்றினை ஆற்றுவதற்காக சென்ற குருவானவர், அரசின் பாதுகாப்பு அமைச்சின் விஷேட அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லமுடியாது திரும்பிச் சென்றதையும் என்னால் காணக்கூடியதாக இருந்தது. இவருடன் தனது உறவினர்களை சந்திப்பதற்காக தெற்கிலிருந்து சென்ற சிலரும் தமது எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் திரும்பிவருவதை நான் கண்டேன்.

அரசு யுத்தம் நிறைவுற்றதை உத்தியோகபூர்வமாக அறிவித்து ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. 30 வருடத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகள் மற்றும் அரச படைகளிடமிருந்து சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த இந்த வன்னித் தமிழ் மக்கள், படையினரால் நசுக்கப்பட்டனரென்று யாரும் கூறாவிடினும் ஆங்காங்கே காணப்படும் படைமுகாம்களையும், பதுங்கு குழிகளையும் கண்டவுடன் இம்மக்கள் மத்தியில் எழும் பீதி சில விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றது.

தமது சகோதரர்களை, பெற்றோர்களை மற்றும் உறவுகளை பலிகொண்ட இந்தக் கொடிய யுத்தத்தை நடாத்திய படையினர் அவர்களது நினைவுத் தூபிகளை, உணவகங்களை, சிங்கள பெயர்ப்பலகைகளை அமைப்பதுபோன்ற செயற்பாடுகளின்மூலம் இத்தமிழ் மக்களிடமிருந்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினை எதிர்பார்ப்பது சாதாரணமா? ஏற்பட்ட இந்த மகா அழிவின் சிதறல்களை கூட்டித்துடைத்துவிட்டு இம்மக்களுக்கு கைகொடுக்க தெற்கிலிருக்கும் உங்களால் முடியுமா?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.