கொழும்பில் இன்று அதிகாலை வொய்ஸ் ஒப் ஏசியா ஊடகநிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

இன்று அதிகாலை 1.30 மணியளவில் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் செய்திப்பிரிவு தாக்கப்பட்டு முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது.

ரியல், சியத்த, மற்றும் வெற்றி அலைவரிசைகளைத் தன்னகத்தே கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக தமது ஊடகப்பணியை செய்து செயற்படுவதுடன், வெற்றி தமிழ்ச் செய்திசேவை பிரிவு கடந்த மூன்று வருடங்களாக பிரதம செய்தி ஆசிரியர் ஜோ.பென்சி தலைமையில் இயங்கி வருகின்றது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிளவில் குறித்த ஊடக நிறுவனத்தின் செய்திப்பிரிவிற்கு சென்ற இனம்தெரியாத நபர்கள் செய்திப்பிரிவில் காலைநேரச் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செய்தியாளர்களைத் தாக்கி செய்தியறையை முழுமையாகத் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

ஆயுதம் தரித்த 12 காடையர்கள் தமது முகத்தை முழுமையாக மறைத்தப்படி வாயிற்காவலரைத் தாக்கிவிட்டு செய்திப்பிரிவிற்குள் நுழைந்து தமது அட்டகாசத்;தை புரிந்துள்ளனர்.

முன்னதாக இருவர் மாத்திரம் வாயிற்காவலரைத் தாக்கி செய்திப்பிரிவைக் காட்டும்படி அச்சுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த சமிக்ஞையின் பின்னர் வேன் ஒன்றில் இருந்து மேலும் 10 பேர் குறித்த நிறுவத்திற்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது வெற்றியின் காலை நேரச் செய்திகளுக்காக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உதவி ஆசிரியர் ரஜனிகாந்த் மற்றும் செய்தியாளர் லெனின் ராஜ் ஆகியோர் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த தாக்குதலினால் காயமடைந்த லெனின் ராஜ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று திரும்பியுள்ளதுடன் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த தாக்குதலினால் குறித்த செய்தி அறையில் காணப்பட்ட 30 கனணிகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன், மும்மொழிகளுக்குமான செய்தி தயாரிப்பும் தடைப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தில் அவர்கள் செய்தியறையினுள் பெற்றோல் குண்டை வீசியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் ஜன்னல்கள் குளிரூட்டி, படபிடிப்புக் கருவி போன்ற பெறுமதிமிக்க பொருட்களும் சேதமடைந்துள்ளன.

கொம்பனித்தொரு பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்களை நியதித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.