ஐ.நா நோக்கி ஆறாவது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார்.

பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து லண்டனில் இருந்து டோவரைச் சென்றடைந்த அவர், பின்னர் கலையில் இருந்து கடந்த திங்கட்கிழமை தனது மனிதநேயப் பயணத்தை தொடர்ந்திருந்தார்.

இன்று 6வது நாள் நடை பயணத்தில் காலையில் இருந்து இரண்டு மணி நேர நடை பயணத்தில் 11 கிலோமீற்றர்களை அவர் கடந்துள்ளதுடன், Saint-riqurer என்ற இடம் நோக்கி தற்பொழுது நடந்து செல்லுகின்றார்.

திங்கட்கிழமை இரவு சில மணி நேரங்கள் 5 கிலோமீற்றர் நடந்த சிவந்தன், செவ்வாய்க்கிழமை 14 மணித்தியாலங்களில் 51 கிலோமீற்றரும், நேற்று 11 மணித்தியாலங்கள் நடந்து 48 கிலோமீற்றர் தூரமும் கடந்துள்ளார்.

கலை பிரதேசத்தில் இருந்து மொத்தம் 32 மணித்தியாலங்கள் நடந்து 115 கிலோமீற்றர் தூரத்தை அவர் இதுவரை கடந்துள்ளார்.

சிவந்தன் பரிஸ் நகரைச் சென்றடைய இன்னும் 185 கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் மக்கள் இணைந்துகொள்ள…
பிரான்ஸ் தமிழ் மக்கள் கீழுள்ள இலக்கத்தில் தொடர்புகொண்டு சிவந்தனது மனிதநேயப் பயணத்தில் தொடர்ந்து இணைந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் – 0033 66 49 79 490

இதேவேளை, இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ள முடியாத ஏனைய நாட்டு மக்கள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாட்டு உறவுகள் அதிகளவில் தொடர்புகொண்டு தமது வாழ்த்துக்களையும், அவரது நோக்கம் வெற்றிபெற ஒத்துழைப்பையும் தொலைபேசி ஊடாகத் தெரிவித்து வருகின்றனர்.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சுவிற்சர்லாந்து ஜெனீவா முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல்  2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.