சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது

ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

ஆறாவது நாளாக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் கால்களில் வலி ஏற்பட ஆரம்பித்திருப்பதுடன், இன்று இரண்டு தடவைகள் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்து செல்லுகின்றார்.

நடை பயணத்திற்கு தடையாக 27 பாகை செல்சியசில் கடும் வெயில் எறிப்பதுடன், கடும் காற்றும் வீசி வருகின்றது.
இருப்பினும் பிரான்ஸ் தமிழ் மக்கள் அவருடன் இணைந்து நடந்து உற்சாகம் கொடுத்து வரும் அதேவேளை, மேலும் பலர் இணைந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் கடற்கரையான கலைஸ்சில் இருந்து 140 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ள சிவந்தன் இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சுவிற்சர்லாந்து ஜெனீவா முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.