அமெரிக்காவின் எப்.பி.ஐ காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு

குற்றத் தடுப்பு, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு ஆகிய துறைசார்ந்த அமுலாக்கத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு உளவமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ அண்மைக் காலமாக சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் தலையிடத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு உளவுச் செயற்பாடுகளுக்கு அமெரிக்க சி.ஐ.ஏ நிறுவனம் பொறுப்பாக இருக்கிறது. சமஷ்டி உளவு அலுவலகமான எப்.பி.ஐயின் அதிகப் பிரசங்கத்தினமும் தலையீடுகளும் உயர்மட்ட முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க பாதுகாப்புச் சேவைகளுக் கிடையில் நிலவும் போட்டி பூசல்களும், உள்ளகப் பிளவுகளும் காலத்திற்கு காலம் வெளிப்படுகின்றன.

எதிரும் புதிருமாக பயணிக்கும் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ ஆகியவற்றின் முரண்பாடுகளும் போட்டிகளும் வெளி அரங்கிற்கு வரத்தொடங்கியுள்ளன. சி.ஐ.ஏயின் செயல் வட்டத்திற்குள் எப்.பி.ஐ தனது மூக்கை நுளைக்கத் தொடங்கியுள்ளதால் அதன் விளைவுகள் பாரதுராமான தூரம் சென்றுள்ளன.

தனது நாட்டு எல்லைக்குள் மாத்திரம் செயற்படும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எப்.பி.ஐ சர்வதேச அரசியல் நோக்கர்கள் வினவுகின்றனர். உலகமெலாம் கிளை பரப்பிச் செயற்படும் சி.ஐ.ஏயின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் எப்.பி.ஐ ஈடுபடுகிறதா என்ற சந்தேகப் பார்வையும் பரவலாகப் காணப்படுகிறது.

அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் தொடர்பான காட்டமான அறிக்கைகளை எப்.பி.ஐ தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. இந்த அறிக்கைகளில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகள் தரப்பட்டுள்ளன இது தமிழர்களுக்கு வேதனை அளித்துள்ளது. பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மித்த கதையாக எம்.பி.ஐயின் செயற்பாடுகள் அமைகின்றன.

கரங்கள் சுத்தமாக இருந்தால் கல்லை வீசுங்கள் என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது. எப்.பி.ஐ களங்கம் அடைந்த நிறுவனம் அதன் உயர்மட்ட உறுப்பினர்கள் சோவியத் ஒன்றியத்திற்;கு இரகசியத் தகவல்களை வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஹான் சன் என்ற எப்.பி.ஐ அதிகாரி அமெரிக்கத் தேசிய இரகசியங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இன்றும் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்.

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை றோவும் எப்.பி.ஐயும் மிகவும் நெருங்கி உறவாடத் தொடங்கியுள்ளன. றோ கொடுத்த தூண்டுதலினால் எப்.பி.ஐ புலிகளுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க அரசு ஒரு விதமான அறிக்கையை வெளியிடும் போது அதற்கு முற்றிலும் எதிரான அறிக்கையை எப்.பி.ஐ வெளியிடுகின்றது. இது மிகவும் நுனுக்கமாகத் திட்டமிடப்பட்ட அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பதில் ஐயமில்லை.

இந்த வருடம் (2010) மார்ச் 12ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட 2009ம் வருடத்திற்கான அறிக்கையில் பின் வரும் கண்டனம் இடம் பெறுகின்றது. சிறிலங்காவில் போர் நிறைவடையும் காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களும் அரசே பொறுப் பேற்க வேண்டும்.

அமெரிக்க அரசின் இந்தக் கூற்று சிறிலங்கா ஆளும் தரப்பை கடும் சீற்றம் அடையச் செய்துள்ளது அதைத் தணிக்கும் முகமாக அமெரிக்க அரசின் நீட்சியான எப்.பி.ஐ புலிகளைக் கண்டிக்கும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

புலிகளை கண்டிக்கிறோம் என்ற சாட்டுப் போக்கில் உலகின் கடற் பாதைகளில் தத்தளிக்கும் ஈழத்தமிழ் அகதிகளையும் எப்.பி.ஐ கொச்சைப் படுத்தியுள்ளது. ய+லியா கில்லாட் அம்மையாரின் தலைமையில் இயங்கும் அவுஸ்ரேலிய அரசை எப்.பி.ஐ பின்வருமாறு எச்சரித்துள்ளது.

அவுஸ்ரேலியாவுக்குள் அகதிகள் என்ற போர்வையில் புலிகள் கடல் மார்க்கமாக ஊடுருவியுள்ளனர். அரசு எச்சரிக்ககையாக இருக்க வேண்டும். இந்த விசமத்தனமான அறிக்கையின் உள் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அது ஒருபுறம் இருக்க உண்மையில் இப்படி எச்சரிக்கை விட வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

அவுஸ்ரேலியா உலக தரம் வாய்ந்த உளவமைப்புக்களை வைத்திருக்கிறது. படகுகள் மூலமாகவோ வேறு வழியாகவோ உள்வரும் ஈழத்தமிழ் அகதிகளை இனங்காணும் சகல ஆளணி வசதிகளையும் அவுஸ்ரேலியா அரசு கொண்டிருக்கிறது. எப்.பி.ஐயின் எச்சரிக்கை மிகவும் கேவலமான அனைவரும் வெருக்கத்தக்க அவுஸ்ரேலியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதில் ஐயமில்லை.

அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் தேசிய அரசு தான் தடுத்து வைத்திருந்த இருபத்தைந்து ஈழத்தழிழ் அகதிகளுக்கும். புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்றும் இவர்கள் புலிகளே அல்லவென்றும் கூறி அவர்களை விடுதலை செய்துள்ளது அவர்களுக்கு கனடாவில் வாழும் உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கையும் அறிக்கைகளும் விடுவதில் சூரர்களான எப்.பி.ஐ ஏன் பேசாமல் இருக்கிறது. இல்லை இவர்கள் பசுத்தோல் போர்த்த புலிகள் என்று சுட்டிக்காட்டும் அறிக்கை விடலாம் அல்லவா?

அமெரிக்காவின் இரட்டை நாக்குப் பற்றியும் நடுநிலையாளர்கள் காலத்திற்கு காலம் சுட்டிக் காட்டுவதற்குத் தவறியதில்லை. அமெரிக்காவை மத்திய கிழக்கு முஸ்லிம்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்று பொறுப்பு வாய்ந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.

இஸ்ரேலியன் பிடியில் இருந்து அமெரிக்காவால் விலக முடியவில்லை முஸ்லிம் மக்களுக்கு அமெரிக்காவினால் நீதி வழங்க ஒரு போதும் முடியாது. ஏன் என்றால் யூதர்கள் விடமாட்டார்கள் பாலஸ்தீனப் பிரச்சனை இழுபறிப்படுவதற்கும் படிப்படியாக பாலஸ்தீனர்களுடைய நிலம் யூதர்களிடம் பறிபோவதற்க்கும் அமெரிக்காவின் பக்கச் சார்பு நிலைப்பாடு அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

அமெரிக்காவின் உண்மை முகத்தை ஈழத்தமிழர்கள் மிக அண்மையில் தரிசித்துள்ளனர் அதிபர் ஒபாமாவின் இரு முக்கிய அதிகாரிகள் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்தமைக்கான வாழ்த்தை அமெரிக்க அரசு சார்பில் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரிவிப்பதற்காக 2010 மே 14ம் நாள் கொழும்பு வந்துள்ளனர்.

அமெரிக்க அதிபரின் சிறப்பு உதவியாளரும், இனப் படுகொலை, மனித உரிமைகள், மற்றும் பல துறைகளுக்குப் பொறுப்பான சமந்தாபவர், பொது மக்கள் பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் டேவிட் பிறெஸ்மான் ஆகிய இருவரும் தான் மேற்கூறிய முக்கிய அதிகாரிகள். இராஜங்கத் திணைக்கள அறிக்கை மூலம் அமெரிக்கா சிறிலங்காவைக் கண்டிக்கிறது. அதே மூச்சில் இரு அதிகாரிகளை அனுப்பி வாழ்த்தும் தெரிவிக்கிறது.

அமெரிக்கா அரசு வாழ்த்துக் கூற வேண்டிய அவசியம் என்ன? காரணத்தை தேடும் அவசியம் இல்லை இந்து மாகடலையும் சிறிலங்காத் தீவையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்குடன் அமெரிக்காவும் இந்தியாவும் பங்காளிகளாகி விட்டனர்.

இரு நாடுகளும் ராஜபக்ச அரசின் அடியர்களாகி விட்டனர் புலிகளைக் கண்டிக்கும் பொறுப்பை இந்த நாடுகள் எப்.பி.ஐயிடம் ஒப்படைத்து விட்டன. எப்.பி.ஐ கவனிக்க வேண்டிய எத்தனையோ முக்கிய பணிகள் அமெரிக்க நாட்டிற்குள் இருக்கின்றன அவற்றைக் கவணிக்காமல் அது எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படுகிறது. இது தேவை தானா?

அமெரிக்கத் தூதர் பற்றீசியா பூட்னிஸ் அவர்களை சிறிலங்கா அரசு நடத்தும் விதம் பற்றி எப்.பி.ஐ கவலைப்பட்டதுண்டா சென்ற மாதம் நல்லெண்ணப் பயண நோக்கில் பற்றீசியா பூட்னிஸ் அவர்கள் யாழ்ப்பாணம் சென்றது பற்றி அனைவரும் அறிவார்கள்.

ஆனால் சிறிலங்கா இராணுவ மற்றும் பொலிஸ் உளவுத்துறையினர் அமெரிக்கத் தூதரை பின் தொடர்ந்து வேவு பார்த்ததை பலர் அறிய வாய்ப்பில்லை. அவர் யாருடன் என்ன பேசினார் என்று உளவுத்துறையினர் தூதரைப் பற்றித் துருவித் துருவி ஆராய்ந்தார்கள்.

இதைவிட வேறு என்ன அவமானம் அமெரிக்காவுக்கு வேண்டும். சி.ஐ.ஏயும் எப்.பி.ஐயம் ஏன் சும்மா இருக்கிறார்கள் அறிக்கை விட வேண்டியது தானே… அல்லது கலைஞர் கருணாநிதியைப் போல் கடிதம் எழுதலாமே…

சிறிலங்காவிற்குள் நுளைவதற்கு முன் நடவடிக்கையாக அமெரிக்க தூதுவரின் அவமானத்தை மூடிமறைக்க அமெரிக்க உளவு நிறுவனங்கள் தீர்மானித்து விட்டினமோ தெரியவில்லை. அமெரிக்கா பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்து வருகிறோம் என்று சொல்லமல் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படவேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.