போர்குற்றத்தில் ஈடுபட்ட சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த சிங்கள ஊடகவியலாளர் தகவல்

கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய படைப்பிரிவு சுட்டுக் கொலைசெய்து விட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் இலங்கை படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார்.

இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் இருந்தவர்களும் உள்ளடங்குவர்.

பெண் மற்றும் ஆண் புலிப் போராளிகளை சித்திரவதை செய்து வன்னியிலேயே கொன்று தீயிட்டு கொழுத்தியவர்கள். காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்களை சித்திரவதை செய்து கொன்றவர்கள் ஆகியோரும் இந்தப் போர்க்குற்றம் செய்த படையினரில் அடங்குவர்.

யுத்தம் முடிந்த பின்னர் இவர்களில் சிலர் சரத் பொன்சேகாவுடன் தொடர்பை பேணியும் வந்துள்ளனராம். இதனால் சந்தேகமுற்ற கோத்தபாய ராஜபக்ச தனது இரகசிய படைகள் மூலம் இவர்களை கொலை செய்ததாக இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

குறிப்பாக இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கு பொறுப்பாக நியமிகப்பட்ட அதிகாரி இந்த ஊடகவியலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தார் என்பதும் பின்னர் அவர் வெடிவிபத்தில் மரணமானதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இரசாயன குண்டுகளை பாவித்தமை குறித்த சில அதிகாரிகளுக்கே தெரியும் எனவும் இந்த குண்டுகள் ஏனைய குண்டுகளுடன் களமுனைக்கு அனுப்பபட்டதாகவும் ஏற்கனவே தகவல் வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதை விட நூற்றிற்கு மேற்பட்ட அதிகாரிகள் இன்னமும் விசாரணையென அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களாம்.இவர்கள் போர்க்குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.
இவர்கள் மீது பொன்சேகாவின் வழக்கு தொடர்பாகவோ அல்லது விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்றோ குற்றம் சுமத்தி தண்டனை வழங்கப்படலாம் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

சில அதிகாரிகளுக்கு வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகளையும் வசதிகளையும் கொடுத்து அங்கேயே குடியமர்த்தும் திட்டத்தினையும் அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.

எது எப்படி இருப்பினும் என்றோ ஒரு நாள் இவர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவருவார்கள் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறினார்.

இந்த ஊடகவியளார் தம்மிடம் கிடைத்த போர்குற்ற மீறல்கள் தொடர்பிலான தகவல்களை குறித்த அமைப்புக்களுக்கும் முக்கிய நாடு ஒன்றிற்கும் வழங்கியுள்ளார்.

இந்த ஊடகவியலாளருக்கு இன்னமும் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதனால் பெயரை குறிப்பிடவில்லை.

நன்றி: ஈழநாதம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.