ஐ.நா இறுதிநாள் கவனயீர்ப்பு நிகழ்வு பிற்போடப்படலாம் – 8வது நாளில் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.

நேற்று 12 மணித்தியாலங்கள் நடந்து 41 கிலோமீற்றர் தூரத்தை சிவந்தன் கடந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி லண்டனில் இருந்து மனிதநேயப் பயணத்தை ஆரம்பித்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட தூரத்தை நடந்து கடந்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமை இரவு பிரான்சின் கடற்கரையான கலையை சென்றடைந்த பின்னர் இன்று காலை 11:00 மணிவரை காலைப் பிரதேசத்தில் இருந்து 52 மணித்தியாலங்களில் சுமார் 170 கிலோமீற்றர்கள் அவர் நடந்து கடந்துள்ளார்.

பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 126 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியிருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள் மலைப்பாங்கான பிரதேசங்கள் ஊடாக நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சிவந்தன் ஒரு நாளைக்கு அண்ணளவாக 50 கிலோமீற்றர்கள் கடந்து செல்வதால், எதிர்வரும் 6ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வை பிற்போடுவது பற்றி ஐரோப்பிய அமைப்புக்கள் அனைத்தும் ஆலோசித்து வருகின்றன.

ஜெனீவா காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னர் இறுதிநாள் கவனயீர்ப்பு பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும், அனைத்து தமிழ் அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார்.

சிவந்தனுக்கு துணையாக லண்டனில் இருந்து அவருடன் சென்றிருந்த இலக்கியனும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்வதுடன், பிரான்சின் கடற்கரையான கலைசில் இருந்து பொஸ்கோ என்ற இளைஞன் தொடர்ச்சியாக சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்லுகின்றார்.

பிரான்ஸ் தமிழ் உறவுகள் அடிக்கடி சிவந்தனுடன் இணைந்து நடந்து தமது ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.