9வது நாளில் தொடரும் மனிதநேயப் பயணம் : அதிகளவில் இணையும் மக்கள்

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 9வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.

இவரது பயணத்துடன் அதிகளவிலான மக்கள் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர். இன்று காலை முதல் 10இற்கும் மேற்பட்டவர்கள் சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

நேற்று 30 பேர் வரையில் இணைந்து நடந்த அதேவேளை, அதற்கு முதல் நாள் 20இற்கும் மேற்பட்டவர்கள் இந்த மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர்.

இன்று காலை முதல் Beauvais என்ற இடத்தில் இருந்து Noailles நோக்கி சிவந்தன் நடந்துகொண்டு இருக்கின்றார்.

நேற்று 12 மணித்தியாலங்கள் நடந்திருந்த சிவந்தன் 42 கிலோமீற்றர்களைக் கடந்திருந்தார். பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றரும், பிரான்சில் 64 மணித்தியாலங்களில் 228 கிலோ மீற்றரையும் அவர் இதுவரை நடந்து கடந்திருக்கின்றார்.

பரிஸ் நகரை அடைவதற்கு 68 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியிருப்பதுடன், நாளை அவர் பரிஸை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பரிசில் மக்கள் எழுச்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் சிவந்தன் அங்கிருந்து ஜெனீவா நோக்கி மேலும் 600 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல இருக்கின்றார்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.