கிளிநொச்சி பொன்நகர் கிராமத்திற்கு மீள் குடியேற சென்ற மக்கள் இராணுவத்தால் துரத்தியடிப்பு

கிளிநொச்சியில் ஏ9 பாதைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்நகர் வீட்டுத்திட்டத்தில் மக்கள் மீளக்குடியமரப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
கிளிநொச்சிச் செயலக அதிகாரிகளால் வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 35 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு மீளக்குடியமர்த்துவதற்காகக் கூட்டிச் செல்லப்பட்டனர்.

ஆனால், அங்கு சென்ற மக்களைக் குடியமர படையினர் அனுமதிக்க மறுத்து விட்டனர். கொதிப்படைந்த மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரும்பிப்போக முடியாது என்று அவர்கள் விடாப்பிடியாக நின்றனர். எனினும் செயலக அதிகாரிகள் அவர்களைச் சமாதானப்படுத்தி அழைத்துவந்தனர்.தற்போது அந்த மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பொன்நகர் பகுதியில் வலுவிழந்தோர், விதவைகள் தங்குவதற்காக 50 வீட்டுத் திட்டம் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த இராஜ் இராஜரட்னம் அவர்களினால் புனர்வாழ்வுக்கழகம் ஊடாக 2003 ஆம் ஆண்டு கட்டபட்டு இருந்தது.

அந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 35 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மீள் குடியமர்வுக்காக செயலக அதிகாரிகளால் நேற்று அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் மீளக்குடியமரச் சென்றபோது, இந்த வீடுகள் புலிகள் அமைத்தவை. அவற்றில் பொதுமக்களை மீள்குடியமர அனுமதிக்க முடியாது என்று படையினர் கூறிவிட்டனராம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.